சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.
கடந்த வியாழக்கிழமை சோலை வரி அறவிடுவதற்காக சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகைதந்த கல்முனை மாநகர சபையின் வரி அறவீட்டு உத்தியோகத்தர்களை, மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக் குழு உறுப்பினரான றபீக் அவர்கள், சாய்ந்தமருது மக்களிடம் சோலை வரி அறவிட வர வேண்டாம் என அச்சுறுத்தி, திருப்பியனுப்பிய சம்பவமே அப்பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையினால் குப்பை சேகரிக்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டமை இது முதற் தடவையல்ல.
இதற்கு முன்னரும் பல தடவைகள் சோலை வரி அறவிடுவதற்காகவும் வியாபார அனுமதிப்பத்திர விநியோகத்திற்காகவும் சென்ற மாநகர சபை உத்தியோகத்தர்கள் தடுக்க்ப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் தாக்கப்பட்டும் அனுப்பப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவை தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகளும் உள்ளன.
இவ்வாறான சம்பவங்களின் தொடர்ச்சியாகவே கடந்த வியாழனன்றைய சம்பவமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் ஒரு கெளரவ மாநகர சபை உறுப்பினர் இதனை முன்னின்று நடத்தியுள்ளார் என்றால் அது எவ்வளவு பாரதூரமான சம்பவம். என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கல்முனை மாநகர சபைக்குரிய வரியிறுப்பாளர்களாகிய சாய்ந்தமருது மக்களில் பெரும்பான்மையானோர் கடந்த சில வருடங்களாக சோலை வரி கட்டாமலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் பெறாமலும் கல்முனை மாநகர சபையின் சேவைகளைப் பெற்று வருவதென்பது எந்தளவுக்கு நியாயமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வரிகளைச் செலுத்துகின்றபோது, அந்த நிதியில் இருந்து சாய்ந்தமருது மக்கள், கல்முனை மாநகர சபை்யின் சேவைகளை எதிர்பார்ப்பது தர்மமாகாது என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
நீங்கள் சாய்ந்தமருதுக்கென ஒரு தனியான உள்ளுராட்சி சபையை கோரி வருகின்றீர்கள். அது உங்களுடைய உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தகைய உள்ளுராட்சி சபையொன்று கிடைக்கும் வரை நீங்கள் கல்முனை மாநகர சபைக்குரிய பிரஜைகளாகவே இருந்து வருகிறீர்கள். அந்த அடிப்படையில்தான் நீங்கள் கல்முனை மாநகர சபையிடமிருந்து சேவைகளை எதிர்பார்க்கின்றீர்கள்.
எனினும் அத்தகைய சேவைகளை மாநகர சபை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் எந்த நிதியொதுக்கீடுகளையும் மேற்கொள்வதில்லை என்பது பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
உண்மையில் ஓர் உள்ளுராட்சி மன்றம் முன்னெடுக்கின்ற திண்மக்கழிவகற்றல் சேவை, தெருவிளக்கு பராமரிப்பு, நூல்கங்களின் பராமரிப்பு, வீதி வடிகான் பராமரிப்பு போன்ற சேவைகளை அதன் சொந்த வருமானத்தில் இருந்தே மேற்கொள்ள வேண்டியிருக்கின்றன.
ஓர் உள்ளுராட்சி மன்றத்தின் சொந்த வருமானம் என்பது அதன் கீழ் வாழ்கின்ற மக்கள் செலுத்துகின்ற வரிகளின் திரட்சியாகும்.
ஆகவே இதற்கான பங்களிப்பு என்பது சாய்ந்தமருது மக்களுக்கும் உரியது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதன் பின்னணியிலேயே கல்முனை மாநகர சபையும் உங்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சோலை வரியை வேண்டி நிற்கிறது.
கடநத வியாழன் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடக்கம் சார்ந்தமருது பிரதேசத்தில் குப்பை சேகரிக்கும் பணிகளை கல்முனை மாநகர சபை இடைநிறுத்தியிருப்பதானது ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்களால்தான் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத் தருகின்றேன்.
எனவே இம்முரண்பாட்டிற்கு விரைவாக சுமூகத் தீர்வைக் காண்பதற்கு சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினரதும் சுயேட்சைக் குழு உறுப்பினர்களினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றேன்.
இவ்வாறு கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Post A Comment: