TRENDING NOW

இளைஞர் சக்தியினை ஒன்று திரட்டி பொதுஜன பெரமுனவை பலப்படுத்த திட்டமிட்டுள்ளேன்!
இனத்துவ அரசியலை புறந்தள்வோம், தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளுங்கள்....
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா அறைகூவல்!
முஸ்லிம் தலைமைகளினால் பிழையாக வழிநடாத்தப்பட்டு, நடுத்தெருவில் கைவிடப்பட்டுள்ள எமது முஸ்லிம் சகோதரர்கள் அனைவரும் இனத்துவ அரசியல் கட்சிகளை புறந்தள்ளி, தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ள முன்வர வேண்டும் என்று முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அறைகூவல் விடுத்துள்ளார்.
மலர்ந்துள்ள புதிய தலைமைத்துவம் நல்லிணக்கத்தை பலப்படுத்தி, எதிர்கால சந்ததிகளின் நல்வாழ்வுக்கும் சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்பவும் காத்திரமான பங்களிப்பினை மேற்கொள்ளும் என்பதில் யாரும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அமோக வெற்றியைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"இந்நாட்டு மக்கள் ஒரு சிறந்த தலைவனை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் சக்தி மிக்க தலைமையாக சிங்கள பெரும்பான்மை மக்களின் இந்த தெரிவு காணப்படுகிறது. மறுபுறத்தில் முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தி பெரும்பான்மை மக்களிடம் இருந்து முழு முஸ்லிம் சமூகத்தையும் குறிப்பாக வடக்கு, கிழக்கு முஸ்லிம் மக்களை துருவப்படுத்தும் மிகப்பெரும் துரோகத்தனத்தை முஸ்லிம் அரசியல் தலைமைகள் இருவரும் முன்னெடுத்தனர்.
இது எமது சமூகத்துக்கு மிகவும் ஆபத்தான செயற்பாடாகும் என எமது தேர்தல் பிரச்சாரத்தின்போது பல தடவை கூறினோம். அது இன்று உண்மையாகியுள்ளது. மொத்தத்தில் மக்களை பலிக்கடாவாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர். இதனை சீர்செய்தாக வேண்டும். அதற்கான பொறுப்பை ஏற்று மிகவும் நிதானமாக செயல்பட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான கறைகளை போக்க வேண்டும்.
கடந்த காலங்களில் எமது தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களினாலே முஸ்லிம்கள் வழிகெடுக்கப்பட்டுள்ளோம். இதிலிருந்து மீள வேண்டும். இனத்துவ அடையாளத்ததுடன் காணப்படும் கட்சிகளை புறந்தள்ளுங்கள். தேசிய அரசிய நீரோட்டத்தில் இணையுங்கள். அதற்காக மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவோடு எனது அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு அறைகூவல் விடுக்கிறேன். இதன் மூலம் இனவாதத்தினை முற்றாக களைவோம்.
இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் உண்மை பேசும் சமூகத்தினர் என்கிற எண்ணப்பாட்டை பிற சமூகத்தினர் மத்தியில் உருவாக்க வேண்டும். நாட்டுப்பற்று மிக்க முஸ்லிம்களின் மகிமை கட்டியெழுப்பப்பட வேண்டும், அதற்காக இளைஞர்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அதற்கான சிறந்த வழிகாட்டலாக எனது அரசியல் பாதை எதிர்காலத்தில் அமையும் எனவும் உறுதியளிக்கிறேன்.
அதேவேளை சிறந்ததொரு அபிவிருத்தி பாதைக்கு கல்முனை மக்களை கொண்டு செல்வதே எனது தூரநோக்காகும். அதற்குரிய பாரிய திட்டங்கள் என்னிடம் உள்ளது. புதிய கல்முனை நகரத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது. இனங்களிடையே நல்லுறவை கட்டியெயெழுப்ப வேண்டும். அவ்வாறே சாய்ந்தமருதின் நியாயமான நீண்டகால கோரிக்கை நிச்சயம் நிறைவேறும். அதேபோன்று கல்முனை பிரச்சினைக்கும் சுமூகமாக தீர்வு காணப்படும்.
இந்த தேர்தலின்போது எனது மீள் வருகையினால் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டேன். இவை அத்தனையையும் முறியடித்து இன்று பெரு வெற்றி பெறப்பட்டுள்ளது. இன்று இதனை கொண்டாடுகின்றோம். குறுகிய எண்ணம் கொண்டு மக்களை பிழையான வழிக்கு ஒருபோதும் நான் கொண்டு செல்ல மாட்டேன். எப்போதும் நேர்மையாக அரசியல் செய்பவன், இனவாதம் என்னிடம் கிடையாது, பிரதேசவாதம் என்பது என்னிடம் அறவே இல்லை.
இத்தேர்தலில் கல்முனை தொகுதியில் சுமார் 7500 வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்துள்ளன. அதனை நான்கு மடங்காக்கும் வேலைத்திட்டம் என்னிடம் உள்ளது. இதற்காக இளைஞர் சக்தியினை ஒன்று திரட்டி பயணிக்க திட்டமிட்டுள்ளேன்" என்றும் குறிப்பிட்டார்.

வை எல் எஸ் ஹமீட்

‘கல்முனை பிரச்சினைக்கு “ இரதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்” உடனடியாகத் தீர்வு காணவேண்டும்’ என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது.
“ இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு” என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் ‘ கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன்சமிக்சையா அது? எனும் பலமான சந்தேகம் எழுகின்றது.
கட்சிக்குள் கடுமையான ஒரு உள்ளகப்போட்டி நடைபெறுவதாகவும் ஏற்கனவே செல்வாக்கிழந்த அடுத்த ஊரின் ஆதரவை மீளப்பெற்றுக்கொள்வதில் உரிமை கோருவது யார்? என்ற போட்டி நிலவுவதாவும் செய்திகள் அடிபடுகின்றன.
அது அவர்களது கட்சியின் உள்விவகாரம். அது நமது கவனத்திற்குரியதல்ல. ஆனால் நமது பயமெல்லாம் எதை விட்டுக்கொடுத்தாவது அடுத்த ஊரின் பிரச்சினையையும் சேர்த்து அவசர தீர்வுகண்டு செல்வாக்கை கையகப்படுத்தும் உள்ளகப்போட்டியில் கல்முனையின் ஒரு பகுதியை இழந்துவிடுவோமோ! என்பதாகும்.
எல்லை விடயத்தில் கட்சியின் உள்ளே உறுதியான நிலைப்பாடு இல்லை; என்ற சில செய்திகள் ஏற்கனவே கிடைத்ததனால்தான் சில தினங்களுக்கு முன் சூசகமாக சில குறிப்புகளைச் செய்திருந்தேன். இந்நிலையில் “ தீர்வு” என்ற பெயரில் கல்முனையின் கணிசமான பகுதி விட்டுக்கொடுக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் உள்ளத்தை கவலைகொள்ளச் செய்கிறது.
எனவே, கல்முனை மக்கள் சற்று உசாரடையுங்கள். “ கல்முனை” விடயத்தில் அந்தக் கட்சி ஒரு பாராமுக நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றது; என்பது இத்தனை ஆண்டுகள் எதுவித அபிவிருத்தியுமில்லாமல் கல்முனை பாழ்கிடப்பதில் இருந்து இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது. எனவே, நாம் அசந்தால் “முதலுக்கே சேதாரமாகலாம்”.
பாண்டிருப்பு, சே குடியிருப்பு, ம சேனை, தி மடு தமிழருக்கு செயலகம் தேவை என்றால் அதனைக் கொடுக்கட்டும்; ஆட்சேபனை இல்லை.
கல்முனை வாழ் முஸ்லிம், தமிழர், சிங்களவர்க்கு பி செயலகமும் மாநகர சபையும் இருக்கும்போது இன்னுமென்ன செயலகத்தை தமிழர் கோரமுடியும்?
கல்முனையில் இருக்கும் தமிழருக்கு கல்முனை பிரதேச செயலகத்தில் உடன்பாடு இல்லையெனில் அவர்கள் இடம்பெயர்ந்து பாண்டிருப்பு பிரதேச செயலக எல்லைக்குள் சென்று வாழலாம். அது அவர்களது உரிமை. அதைவிடுத்து, கல்முனையை உடைத்து பாண்டிருப்பு செயலகத்துடன் இணைப்பது மட்டுமல்லாமல் அதற்கு “ கல்முனை வடக்கு எனப் பெயர் சூட்டுவது எந்தவிதத்தில் நியாயம்.
எனவே, “விட்டுக்கொடுப்பு” என்ற சொல்லே “ கல்முனைக்கான ஆப்பாகும். ஏன் அமைச்சர் ஹக்கீம் எந்த சொற்றொடரைப் பாவித்திருக்கின்றார்; என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அவர் தமிழ்த்தரப்பிற்கு தெட்டத்தெளிவாக சொல்லவேண்டிய பதில், “ கல்முனையில் செயலகம் இருக்கும்போது கல்முனைத் தமிழர் இன்னுமொரு பிரசத்திற்கான செயலகப் பிரிவுக்குள் வரவிரும்பினால் அவர்கள்தான் செல்லவேண்டுமே தவிர கல்முனை உடைத்துக்கொண்டு செல்லமுடியாது; என்பதாகும்.
இதை எப்பொழுதே சொல்லி பிரச்சினையைத் தீர்த்திருக்க வேண்டும். வரலாற்றில் முஸ்லிம்களின் எந்தப்பிரச்சினையையும் தீர்க்கவில்லை; என்பதற்காக கல்முனையில் ஒரு துண்டைப் பறிகொடுத்து ஒரு தீர்வு கல்முனைக்கு வேண்டாம்.
எனவே கல்முனை மக்கள் உசாரடையுங்கள்.
M S காரியப்பர், M C அஹமட், A R மன்சூர், மறைந்த தலைவர் போன்றவர்கள் பாதுகாத்துத் தந்த கல்முனையைப் பறிகொடுத்துவிடவேண்டாம்.
அது இலங்கை முஸ்லிம்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும்.
இத்தனை நியாயங்களையும் தன்னகத்தேகொண்ட ஒரு கல்முனையையே பாதுகாக்கமுடியாத முஸ்லிம் அரசியல் முஸ்லிம்களின் எதைப் பாதுகாக்கப்போகின்றது.
இலங்கையில் எங்கு முஸ்லிம்களுக்கு பாதிப்பு நடந்தாலும் அதற்கெதிராக தலைமைத்துவம் வழங்கி போராடவேண்டிய கல்முனை தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருந்தால் நிலைமை என்ன?
எனவே, உசாடையுங்கள்.
எஸ்.எச்.எம். பிர்தௌஸ்

எத்தனையோ பிரச்சினைகள் மஹிந்த காலத்தில் மக்களுக்கு இருந்தன, கானாமல் போதல், ஊடக அடக்குமுறை, வெள்ளை வேன்களின் அச்சத்தால் வாய்மூடி மக்கள் மௌனமாக இருந்ததற்காக அவரது ஆட்சி பிரச்சினையில்லாத ஆட்சியாக சர்வாதிகார ஆட்சியாக யாராலும் எதிர்க்க முடியாத ஆட்சியாக அன்று திகழ்ந்து !

ஆனால் இன்றைய நல்லாட்சி என்ற நாசமாகப்போன ஆட்சி வந்த காலம் முதல் வழங்கப்பட்ட மக்களுக்கான அடிப்படை சுதந்திரம் என்ற விடயத்தால் அனைத்து விதமான பிரச்சினைகளும் வீதிவலம் வரத்தொடங்கியதால் இந்த ஆட்சி தொடங்கிய காலம் முதல் எல்லாமே பிரச்சினையாகவே வெளிப்படுத்தப்படுகிறது ,

போதாக்குறைக்கு அரசியலமைப்பும் நீதித்துறையும் சுதந்திரமாக இயங்குவதும் ஆணைக்குளுக்களின் செயற்பாடுகளும் நிர்வாகத்தில் இருந்த முறைகேடுகளை இல்லாமலாக்க முயன்றதும் இன்னும் மேலதிக வலுவை இத்தகைய சக்திகளுக்கு வழங்கியது ,

எல்லை மீறிய ஊடக சுதந்திரமும் உண்மைகளை அறியும் தகவலறியும் சட்டமும் மக்களை ஜனநாயக்த்தின் பால் முன்னேற தூண்டியது ,

இத்தகைய நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் தங்களது ஆட்சியை கனவிலும் அமைக்க முடியாது என்றுனர்ந்த கடந்தகால ஆட்சியாளர்கள் இருக்கும் சுதந்திரத்தை எப்படியாவது முடக்க வேண்டும் என்பதற்காக இனவாத ஊடகங்களையும் இனவாதிகளையும் பின்னால் இருந்து இயக்கி இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதன் வெளிப்பாடுகளே இனவாத மோதல்களும் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டகாசங்களும் ,கடை எறிப்புக்களும் ,ஊழல் துஷ்பிரயோக செயற்பாடுகளுமாகும் ,

தொடர் வீதி போராட்டம்கள்,பிரதேச இனவாத மோதல்கள் முறுகல்கள் என உருவாக்கி மக்களுக்கு சுதந்திரத்தையும் ஊடக சுதந்திரத்தையும் வழங்கிய ஜனநாயக சக்திகளின் அரசை கையாலாகாத அரசு என ஒதுக்கி ஓரம்கட்ட இனவாதத்தையும் பௌத்த மேலாதிக்கவாதத்தையும் கையிலெடுத்து செயற்படுத்தும் இத்தகைய சக்திகளை முறியடிக்க வேண்டுமானால் என்ன விலை கொடுத்தேனும் இந்த சிறுபான்மை அரசை பாதுகாக்க வேண்டிய தேவை அடிப்படை ஜனநாயக சக்திகளுக்கு முன்னுரை விட பலமடங்கு எதிர்காலத்தில் உண்டு.

இல்லை எனில் இந்த சிறுபான்மை ஜனநாயக ஆதரவு அரசின் முடிவின் பின்னர் வரும் சிற்றினங்களுக்கு எதிரான இனவாதத்தால் வென்ற பெரும் தேசியவாத பௌத்த ஆதரவு அரசு கடந்த அவர்களின் ஆட்சியை விட பலமடங்கு அசுர வேகத்துடன் சிறுபான்மை இனங்களையும் ஜனநாயக ஆதரவு சக்திகளையும் இந்த நாட்டு அரசியலில் இருந்தும் இந்த நாட்டில் இருந்தும் துரத்தியடிக்க முனையும் என்பதை நாட்டு மக்களும் இந்த ஆட்சியில் நடைபெறும் அவலங்களை குறைபாடுகளை வைத்து இந்த சிறுபான்மை அரசை விமர்சிப்போர் புரிந்து கொள்ளல் வேண்டும் ,

கடந்த அரசின் பேரின மேலாதிக்கவாத எச்ச சொச்சங்களையும் சில முஸ்லிம் விரோத இனவாதிகளையும் சேர்த்துக் கொண்டு பயணித்து அதன் ஆட்சிக்கால முடிவை நெருங்கியுள்ள இந்த அரசை பழைய ஆட்சியின் எச்ச சொச்சங்களில் இருந்து விடுவித்து மிதவாத ஜனநாயகத்தை விரும்பும சக்திகளோடு மீண்டும் பதவிக்கு கொண்டுவந்து நேரிய உரிய ஜனநாயக ஆட்சியை ,அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் , சிறுபான்மை இனங்களுக்கு உரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டு வளங்கக் கூடிய, வெளிநாட்டு உதவும் சக்திகளோடு சேர்ந்து நாட்டை வளம்படுத்த பொருளாதாரத்தை உயர்த்த உதவ வேண்டியதே இன்றுள்ள ஜனநாயக சக்திகளின் பொதுவான தேவையாகும்,

இன்றுள்ள பிரச்சினைகளுக்கு,சிறுபான்மை இனங்களுக்கு குறிப்பாக இந்த ஆட்சியை கொண்டு வந்த முஸ்லிம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கடந்த கால நீல சர்வாதிகார பேரின கொள்கை கொண்ட நீலக்கட்சியின் ஒரு தூனாக இருந்து உள்சதி செய்து ,கூட இருந்து குழி பறித்து வந்த ஜனாதிபதியே காரணம் என்பதும் அவரின் பேரின பௌத்தவாத கொள்கையே சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கடந்த பேரழிவுகளை வழங்கியது என்பதும், நாட்டு பாதுகாப்பு குறைபாட்டுக்கு அவரின் அசட்டைகளே காரணம் என்பதும் தற்போது விசாரனைகள் மூலம் வெளிவருகையில் இந்த வேறுபாட்டு கொள்கை கொண்ட இரு தலைமைகளின் ஆட்சியானது வேறுபாடான திசையில் செல்ல காரணமாகியது என்பது கண்கூடு ,

எனவே எதிர்வரும் காலத்தில் மீண்டும் இத்தகைய நிலை வராது ஒரே கட்சி ஒரே ஜனாதிபதி அதே கட்சி பிரதமர் என்ற கொள்கையோடு ஜனநாயக ஆட்சியை மாத்திரம் வலியுறுத்தும் புதிய சக்தியையும் கட்சியையும் இனம்கண்டு ஆட்சிப் பொறுப்பை மக்கள் வழங்க வேண்டும்.

அதே போன்று யுத்த வெற்றியை மாத்திரம் காட்டி ஆட்சியை பிடித்து ஜனாநாயகத்தை குழிதோண்டி புதைத்து ஊடக அடக்குமுறையை செய்து சர்வாதிகார ஆட்சி புரிய பேரின இனவாத சக்திகளை தீணி போட்டு வளர்த்த மஹிந்த கால அரசுகளை உருவாக்க இந்த நாட்டு மிதவாத சக்திகளும் அரசியல் சந்தர்ப்பவாத குழுக்களும் ஒருபோதும் துனைநின்று விடாமல் இருக்க வேண்டும்.

இல்லையேல் கருனாவும் வியாளேந்திரனும் ஞானசாரவும் டான் பிரசாத்தும் தான் இந்த நாட்டின் சட்டத்தை எழுதுவோராக எதிர்காலத்தில் இருப்பர்.
தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவன்கார்ட் மோசடி தொடர்பில் கைது செய்யுமாறு சட்டமா அதிபரால் உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
சீ.ஏ. ஜெசீகரன்

திருகோணமலை, கன்னியாவில் சர்ச்சைக்குரிய இடத்தில் புதிய பௌத்த விகாரைக் கட்டுமானப்பணிகளை உடன் நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியா, நீராவியடி, கந்தப்பளை உள்ளிட்ட இடங்களில் மதப் பதற்றம் தோற்றுவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழர்களின் பாரம்பரிய இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார் என்று சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"32 பேர் கொண்ட தொல்பொருளாராட்சி திணைக்களத்தின் வழிகாட்டல் ஆலோசனை சபையில் இருக்கின்ற அனைவரும் சிங்கள பெளத்த வரலாற்றாசிரியர்கள் என்ற நிலைமையை மாற்றி, மேலதிகமாக 5 தமிழ் வரலாற்றாசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இந்த தமிழ் வரலாற்றாசிரியர்களின் பங்களிப்புடனேயே இனி புராதன சின்னங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை நான் சமர்ப்பிப்பேன்.

கன்னியா பிரதேசத்துக்குள் தமிழ் இந்துக்கள் நுழைவதைத் தடைசெய்ய தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. இந்தத் திணைக்களத்தின் சிற்றூழியர்கள் சிலர் இத்தகைய அடாவடி நடவடிக்கையில் ஈடுபடுவதை திணைக்களப் பணிப்பாளர் தன் திணைக்கள மட்டத்தில் உடன் தடைசெய்ய வேண்டும்.

முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் மற்றும் அங்கு விகாரை அமைந்துள்ள பகுதியில் எந்தவித புராதன சின்னங்களும் அடையாளம் காணப்படவில்லை. அங்கே புராதன சின்னங்கள் இருப்பதாக விகாரை தேரர் சொல்வது உண்மைக்குப் புறம்பானது என தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டார்.

கன்னியா வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிக்க, தொல்பொருளாராட்சி திணைக்களத்துக்கு அதிகாரமில்லாததால், அவற்றை அந்தப் பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட செயலாளர் புஷ்பகுமார கூறுகின்றார். இந்தநிலையில், வெந்நீரூற்றுக் கிணறுகளைப் பாரமரிப்பது யாரெனத் தீர்மானிக்க ஜனாதிபதி விரைவில் விசேட கூட்டத்தைக் கூட்டுவார்.

மலைநாட்டில் கந்தப்பளை - கோட்லோஜ் தோட்டத்தில் அமைந்துள்ள முனி கோவிலில் பெளத்த கொடியை அங்குள்ள விகாராதிபதி ஏற்றியது பிழையானது. பெளத்த பிக்குகள் சட்டத்தைக் கையில் எடுப்பது பிழை. இந்தப் பிக்குக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் என்னுடன் அமைச்சரான ப.திகாம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வேலு குமார், எஸ்.வியாழேந்திரன் ஆகியோரும், தொல்பொருளாராட்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மாண்டாவேல, இந்து சமய கலாசார திணைக்களப் பணிப்பாளர் உமா மகேஸ்வரன், என்னுடைய சட்ட ஆலோசகர் சட்டத்தரணி கணேஷ்ராஜா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

அனைத்துத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவசர கூட்டம் தொடர்பில் தகவல் அனுப்பியும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை. அ.அரவிந்தகுமார், வே.இராதாகிருஷ்ணன், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. காரணம் தெரியவரவில்லை" - என்றார்.
எம்.வை.அமீர்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதற்தொகுதி மாணவராக இணைந்து கல்விகற்று பின்னர் 2003 ஆம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக தனது பணிகளைப் ஆரம்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர் அகமதுலெப்பை ஹனீஸ், 2019.07.18 ஆம் திகதி முதல் பிரயோக விஞ்ஞான பீடத்தின் கணித விஞ்ஞான பிரிவுக்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தன்னுடைய ஆரம்பக்கல்வியை அட்டாளைச்சேனை அல் முனீரா வித்தியாலயம் மற்றும் கண்டி அசோகா வித்தியாலயம் போன்றவற்றில் ஆரம்பித்த ஹனீஸ், இரண்டாம்நிலைக் கல்வியை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் உயர் கல்வியை கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியிலும் பல்கலைக்கழக கல்வியை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பயின்று கணணி விஞ்ஞான துறையில் சிறப்புப் பட்டத்தை பெற்றிருந்தார்.

முதுமாணிப் பட்டத்தை இந்தியா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், M Tech பட்டத்தை பூர்த்தி செய்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஹனீஸ், அதே பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தையும் பெறவுள்ளார்.

2011 ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்ற ஹனீஸ், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவி நிலைகளிலும் பணியாற்றியுள்ளார். இதில் குறித்த பல்கலைக்கழகத்தில் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவை வடிவமைப்பதில் முன்னின்று செயற்பட்டிருந்தார்.

பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளிலும் சமூக சேவையிலும் துடிப்புடன் செயற்பட்டு வரும் ஏ.எல்.ஹனீஸ், அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவர், சக்காத் நிதியத்தின் தலைவர் மற்றும் அனைத்துப் பள்ளிவாசல்களின் தலைவர் போன்ற பதவிகளிலும் கடமையாற்றியுள்ள  இவர்,அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளனத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் அட்டாளைச்சேனை பாத்திமா அரபிக் கல்லூரியின் தலைவராகவும் கடமையாற்றி வருகிறார்.

அட்டாளைச்சேனையை பிறப்பிடமாகக்கொண்ட ஹனீஸ், மர்ஹூம் அல்ஹாஜ் எம்.ஐ.அகமதுலெப்பை(AD) எம்.எம்.பதூருன்நிஷா ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார். வைத்திய கலாநிதிகளான ஹரீஸ், ஹமீஸ் மற்றும் ஹனீஸா ஆகியோரின் சகோதரரான இவர்

அரச கால்நடை வைத்தியர்  டஹானாவை கரம்பிடித்து, ஆயிஷா அனீகா, அக்தாஸ் அஹமட் மற்றும் அக்யஸ் அஹமட் ஆகிய  மூன்று  குழந்தைகளுக்கு தந்தையுமாவார்.

தென்னாபிரிக்க சுதேச மக்களான கறுப்பு இனத்தவரின் விடுதலைக்காகப் போராடிய மாபெரும் தியாகியான நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் இன்றாகும்.நெல்சன் மண்டேலா, 'க்ஸோசா' என்ற ஆபிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 இல் பிறந்தார்.அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla).

இந்த பெயருக்கு 'பல கிளைகளுடைய மரம்’ அல்லது 'பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பாடசாலை ஆசிரியை, 'நெல்சன்’ என மாற்றி வைத்தார். ஆபிரிக்க மாணவனுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கக் காரணம் அந்த ஆசிரியை ஆங்கிலேயப் பெண். 1920களில் தென்னாபிரிக்காவில் குடியேற்ற ஆட்சி நடந்து வந்தது.

1992இல் வெளியான ஸ்பைக் லீயின் 'மால்காம் எக்ஸ்’ என்ற வரலாற்றுப் படம் மண்டேலாவை கௌரவப்படுத்தி எடுக்கப்பட்டது.1973 ம் ஆண்டில் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையால் அணுக்கருவில் உள்ள துகள் ஒன்றுக்கு ‘மண்டேலா துகள்’ என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கேப் டவுனிலிருந்து கலிபோர்னியா வரை உள்ள ஒரு தெருவுக்கு மண்டேலாவின் பெயரிடப்பட்டுள்ளது. அசாதாரணமான சில அஞ்சலி பொருள்களுக்கும் அவரின் பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த அபூர்வமான ஒரு மரங்கொத்தி பறவை இனத்துக்கும் ‘ஆஸ்ட்ரோலோபிகஸ் நெல்சன் மண்டேலா’ என சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவங்கள் ஆகும்.

மண்டேலா ஒரு மாறுவேட மன்னர். நிறவெறிக்கு எதிராகப் போராடிய காலங்களில் அவர் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக சாரதி உட்பட்ட பல மாறுவேடங்கள் போட்டு பொலிசார் கண்களில் மண்ணைத் தூவினார். 'சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடை’ என்ற தனது சுயசரிதையில், "நான் ஒரு இரவு உயிரினம், பகலில் பதுங்கி இரவில் என் இலட்சியப் பணிகளை தீவிரப்படுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

போராட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டு, குத்துச்சண்டையில் பேரார்வம் கொண்டவர். அதுபற்றி அவர் சுயசரிதையில் கூறும்போது, ‘நான் குத்துச்சண்டையில் உள்ள வன்முறையை வெறுக்கிறேன். அதேசமயம், அதில் உள்ள அறிவியல் பயனுள்ளது. நம்மை தாக்குபவரிடம் எப்படி தற்காத்துக் கொள்வது, அவசியம் ஏற்பட்டால் எப்படித் தாக்குவது. சண்டையின் போது வேகக் கட்டுப்பாட்டை பெறுவது போன்ற முன்னெச்சரிக்கையை அதில் உள்ள அறிவியலாக கருதுகிறேன்’ என்றார் மண்டேலா.

மண்டேலாவின் பெயர் அமெரிக்காவின் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் 2008ம் ஆண்டு வரை அவருடைய 89 வயதிலும் இருந்தது. நிறவெறிக்கு எதிரான போர்க்குணம் இருந்ததால், மண்டேலா உட்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.

சிறுவயது முதலே வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளைக் கண்டு வந்த மண்டேலா தனது சட்டக்கல்வியை 1941-ம் ஆண்டு முடித்தார். இவர் தன்னுடைய 21வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ஆங்கில ஆட்சியின் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தென்னாபிரிக்காவின் கனிம வளங்களைக் கொள்ளையிட வந்த கூட்டம், அந்த மண்ணின் மக்களையே அடிமைப்படுத்தி விலைக்கு விற்பதை தடுக்கப் போராடினார். அதற்காக 1943-ம் ஆண்டு 'ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்' எனும் இயக்கத்தில் சேர்ந்தார். இவரது அயராத போராட்டங்களின் தீவிரங்களைக் கண்டு வெள்ளையர் ஆட்சி அதிர்ந்து போனது. 1956-ம் ஆண்டு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. நான்காண்டு விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்தது.

சிறைவாசத்துக்குப் பிறகு இவரது விடுதலைப் போராட்ட செயல்கள் தீவிரமாகின. முழுமையான விடுதலை கோரிய இவரது போராட்டங்கள் வெள்ளையர் அரசின் அத்திவாரத்தை தாக்கின. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கிய நெல்சன் மண்டேலாவின் அதிரடித் தாக்குதல்கள் அங்கிருந்த வீர இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்தன. தென்னாபிரிக்க தேசமே விடுதலை தீப்பற்றிக் கொண்டு எரிந்தது. இதனால், மீண்டும் 1962-ம் ஆண்டு கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964-ம் ஆண்டு ஜூன் 12 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இளமையெல்லாம் கழிந்து போன பிறகு 11.2.1990 அன்று விடுதலையானார். இவரோடு தென்னாபிரிக்காவின் விடுதலையும் உறுதியானது.

1994-ம் ஆண்டு நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென்னாபிரிக்காவின் ஜனாதிபதிஆனார் நெல்சன் மண்டேலா. உலக சமாதானத்தையும் விடுதலை கொண்ட மக்கள் கூட்டத்தையும் விரும்பிய மக்கள் தலைவர் தனது 95வது வயதில் மரணமடைந்தார். ஆனால், இன்னமும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'நோபல்' உள்ளிட்ட உலக விருதுகள் பலவற்றைப் பெற்ற நெல்சன் மண்டேலா, தியாகத்தின் அடையாளமாக, அமைதியின் சின்னமாகவே வாழ்ந்தார். அவரின் பிறந்த நாளை உலகின் பல நாடுகள் இன்று நினைவு கூருகின்றன.

'கல்வி என்னும் ஆயுதம் உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது', 'ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை, ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டு எழுவதில்தான் புகழ் பெறுகிறார்' என்பவை அவர் உதிர்த்த சிறந்த பொன்மொழிகளில் சிலவாகும்.

உலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு 'நேரு சமாதான விருது' வழங்கியது இந்தியா. ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தினால் அவரது சார்பில் அவருடைய மனைவி வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதினை ஏற்றுக் கொண்டார். அத்துடன் நெல்சன் மண்டேலாவிற்கு இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதையும் 1990இல் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்ற சிறப்பைப் பெற்றவர் நெல்சன் மண்டேலா.

தென்னாபிரிக்க டர்பன் நகரில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாக்கிரக அமைப்பு அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான 'மகாத்மா காந்தி சர்வதேச விருதை' நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. உலக அமைதிக்கான 'நோபல் பரிசும்' 1993ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஆண்-பெண் சம உரிமைக்குப் பாடுபடுதல், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர வேண்டித் தொண்டாற்றுதல் என மக்கள் நலனை முன்னிறுத்தி சேவை செய்த நெல்சன் மண்டேலாவின் உழைப்பைப் போற்றுவதற்காக அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் திகதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. இவ்வறிவிப்பைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு முதல் 'அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

"யாரும் பிறக்கும் பொழுதே நிறத்திற்காகவும், மதத்திற்காகவும், பிற பின்புலத்திற்காகவும் மற்றவரை வெறுக்கும் எண்ணத்துடன் பிறந்ததில்லை, ஒருவர் அவ்வாறு வெறுக்கக் கற்றுக் கொண்டாரானால் அவரை விரும்புவதற்கும் பழக்கப்படுத்த முடியும், ஏனெனில் அன்பு செலுத்துவது என்பது வெறுப்பதை விட மக்களுக்கு இயல்பாக வருவது", என்ற அவரது பொன்மொழியை இந்த நாளில் நினைவு கூர்வது பொருத்தமாகும்.

நன்றி தினகரன்

மருதூர் ஸக்கீ செய்ன்

அரசியல் ஆட்சி மாற்ற சதுரங்க விளையாட்டில் முஸ்லிம்களின் வகிபாகம் எவ்வாறு அமைந்தால் சிறந்தது.

தற்பொழுதைய நல்லாட்சி அரசாங்கத்தை அரசியல் தலைவர்களால் தெரிவு செய்வதற்கு முதலில் முஸ்லிம் சமூகத்தால் விரும்பி இந்த ஆட்சியை உருவாக்கினர்.

ஆனால் ஆட்சி செய்கின்ற நபர்கள் மாறினாலும் இனவாதிகளின் செயற்பாடுகள் காட்சிகளோ எதுவும் மாறவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தால் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை இனவாதிகள் அடக்கப்பட வில்லை கடந்த அரசாங்கத்தை விட இந்த அரசாங்கத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பான பல சவால்கள் ஏற்படுத்தப் பட்டது இனவாதிகளின் ஒடுக்குமுறை போராட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தமட்டில் அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளையும்
டேஷ் போறாக்களின் உறவுகளை பாதுகாத்து அவர்களின் கொள்கையில் அரசியல் செய்கின்ற ஒரு தலைவராக காணப்படுகிறார்

ஆனால் இன்று முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் வடகிழக்கில் முல்லைத்தீவு முள்ளியவளை தொடக்கம் கல்முனை வரை முஸ்லிம் சமூகத்துக்கு சவாலாக இருக்கும் நபர்கள் என்றால் தமிழ் டயஸ்போரா கொள்கை கொண்டவர்களே

ரணில் விக்கிரமசிங்க ஒருபோதும் சுமந்திரனை அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எதிர்த்து அரசியல் செய்ய முடியாது ஏனென்றால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பின்னணிகள் ஐரோப்பிய அமெரிக்காவின் அடிப்படையாகக் கொண்டது

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் வட கிழக்கில் சிங்கள மக்களால் எந்த சவால்களும் ஏற்படுத்தப் போவதில்லை அதே போன்று வடகிழக்குக்கு வெளியில் முஸ்லிம் மக்களுக்கு இனவாதிகளால் ஏற்படுத்தப் படுகின்ற சவால்கள் ஒரு ஆட்சி மாற்றத்தை நோக்கிய சவால்கள் ஆகவே காணப்படுகிறது இவ்வாறு அன்னையில் விமல் வீரவன்சவும் வெளிப்படையாக சொல்லி விட்டார்

இனவாதிகளால் தற்பொழுது ஏற்படுத்தப் படுகின்ற சவால்களை ரணில் விக்கிரமசிங்க கண்டும் காணாதது போல் அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அவரின் அரசியல் பித்தலாட்டத்தை காட்டுகிறது

ஆகவே சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவது சிறந்தது என்பதற்கு அமைய வடகிழக்குக்கு வெளியில் காணப்படுகின்ற இனவாத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு வடக்கில் காணப்படுகின்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான தமிழ் சவால்களை இல்லாமல் செய்வதற்கும் முஸ்லிம் சமூகம் விரும்பியோ விரும்பாமலோ ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்குகின்ற அரசியல் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியில் ரணில் விக்கிரமசிங்க இல்லாத ஒரு ஜனாதிபதி வேட்பாளர் வந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்க இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் அதனால் வருகின்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சொல்லுகின்ற செயல்களை அமுல் படுத்துகிற ஒருவராகத்தான் இருப்பார்

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தமட்டில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்றுதான் மஹிந்த ராஜபக்சவும் ஒன்றுதான் ஆனால் இரண்டு தலைவர்களுக்கு பின்னால் இருக்கின்ற சர்வதேச அரசியல் நிகழ்ச்சிநிரல் நாடுகளையும் பின்னணிகளையும் அடிப்படையாக வைத்து முஸ்லிம் சமூகம் சிந்தித்து செயற்பட வேண்டும்

ஆகவே முஸ்லிம் சமூகம் மிகவும் சாதுரியமாக சிந்தித்து எதிர்கால சமூகத்தின் பாதுகாப்பு இருப்பிடம் கடந்த கால ஆட்சி ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு வட்டத்துக்குள் வைத்து சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரல்களையும் கணித்து சமூகம் சார்ந்த ஒரு ஆட்சியை ஏற்படுத்த கூடிய முடிவை எடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மக்களினதும் கடமையாகும் இதில் தவறு விட்டால் முஸ்லிம் சமூகம் தற்போதைய நிலையை விட பாரிய சவால்களையும் உரிமை இழப்புகளையும் எதிர்நோக்க வேண்டி வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முகம்மத் இக்பால்

பேரினவாத தேசிய கட்சியின் முகவரான பௌசி தலைமையில் நடைபெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் அமைச்சர் பதவிகளை மீண்டும் பாரமெடுக்கத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதனை மக்கள் மத்தியில் நியாயப்படுத்தும் முகமாக தங்களது கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு உறுதிமொழி வழங்கியதாகவும், ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்தபோது மக்கள் மனதில் இருந்த மகிழ்ச்சியும், ஆரவாரமும் மீண்டும் பதவிகளை ஏற்கப்போவதாக அறிவித்தபின்பு எழவில்லை.

மாறாக ராஜினமா செய்தது ஒரு நாடகமா என்று பேசிக்கொள்வதனை காணக்கூடியதாக உள்ளது.

சுதந்திரத்துக்கு பின்பு இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்துவந்த இரண்டு பிரதான கட்சிகளும் பதவி என்னும் சலுகைகளை வழங்கியதை தவிர, சிறுபான்மை சமூகத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் எதனை நடைமுறை படுத்தியுள்ளது ?

பண்டா – செல்வா ஒப்பந்தம் தொடக்கம் இன்று வரைக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கும், அரசாங்கங்களுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் கிழித்தெறியப்பட்டது.

அத்துடன் சர்வதேசத்தின் முன்னிலையில் பெருமெடுப்பில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அதிகாரம் இல்லாத இன்றைய அரசாங்கம் இந்த ஒப்பந்தம் மூலம் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பினை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் ?

அத்துடன் ஒப்பந்தம் என்றதும் பௌத்த பிக்குகள் அதனை நடைமுறைப்படுத்த ஒருபோதும் விடமாட்டார்கள் என்பதும் கடந்தகால வரலாறாகும்.

மவுலவி சஹ்ரான் குழுவினரின் தாக்குதலுக்கு பின்பு ஆயிரக்ககணக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள எமது சகோதரர்கள் விடுதலை செய்யப்பட்டும், இனவாதிகளின் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்கப்பட்டும்,

மற்றும் வடகிழக்கில் மீட்கப்படாத காணிகளில் சிலதையாவது மீட்கப்பட்ட பின்பும் அமைச்சர் பதவிகளை மீண்டும் பொறுப்பெடுப்பதாக தீர்மானித்திருந்தால் அந்த தீர்மானத்தினை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் எமது மக்களின் எந்தவித பிரச்சினைகளும் தீர்க்கப்படாத நிலையில், அரசாங்கத்துடன் ஒப்பந்தம் மட்டும் செய்துகொண்டதாக அறிவித்துவிட்டு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் திடீரென இவ்வாறு தீர்மானிப்பதற்கான காரணமென்ன ?

இது மேற்கு நாடுகளின் அழுத்தமா ? அல்லது தங்களது அல்லக்கைகளின் அழுத்தமா ? என்ற வலுவான சந்தேகம் எழுகின்றது.

எனினும் கடந்த காலங்களில் அமைச்சு அதிகாரங்களை நன்றாக அனுபவித்து பழக்கப்பட்ட அமைச்சர்களின் எடுபிடிகளும், அல்லக்கைகளும் இப்போது அதிகாரமின்றி மன உளைச்சலுக்கு உள்ளானதால் தினமும் அமைச்சர் பதவிகளை பொறுப்பேற்கும்படி அழுத்தம் வழங்கிவருவதாக அறியமுடிகின்றது.

எனவே எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் வழமைபோன்று வெறும் ஒப்பந்தம் செய்ததாக கூறிக்கொண்டு மீண்டும் அமைச்சர் பதவிகளை பொறுப்பெடுப்பதனை சமூக உணர்வுடன் மனச்சாட்சி உள்ள எந்தவொரு மனிதனாலும் ஒருபொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

முகம்மத் இக்பால்

முஸ்லிம்களின் தனியார் சட்டத்தினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பேரினவாதம் நீண்ட காலமாக குரல் கொடுப்பதுடன், அதன் செயல்பாடுகளை திட்டமிட்டு வருகின்றது.

இவ்வாறு பேரினவாதிகளின் திட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை பதினெட்டாக நிர்ணயிப்பதற்கு எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை பௌசியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானித்துள்ளார்கள்.

பேரினவாதிகளினால் நேரடியாக செய்ய முற்படும்போது எழுகின்ற எதிர்ப்பினை சமாளிக்கும் பொருட்டு, எமது கைகளைக் கொண்டே எங்களது கண்களை குத்துகின்ற நிலைதான் எமது உறுப்பினர்களின் இந்த தீர்மானமாகும்.

இந்நாட்டில் பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர்கள் சிறுவயதில் பெண்களுக்கு பலாத்காரமாக திருமணம் செய்துவைத்தால் இந்த சட்டம் சிறுமிகளின் பாதுகாப்புக்கும், அவர்களின் கல்வியை கட்டாயப்படுத்துவதற்கும் வயதெல்லை அவசியம் என்ற ரீதியில் இதனை அங்கீகரிக்கலாம்.

பாகிஸ்தான், வங்காலதேஸ், மொரோக்கோ போன்ற நாடுகளின் சில கிராமப்பகுதிகளில் பெற்றோர்கள் தங்களின் பெண் பிள்ளைகளை கல்வி கற்பிப்பதில் ஆர்வம் செலுத்துவதில்லை.

அத்துடன் பெண்களின் விருப்பமின்றி இளவயதில் பலாத்காரமாக திருமணம் செய்துவைக்கின்ற நடைமுறை அங்கு அதிகமாக காணப்படுகின்றது.

அதனால் குறிப்பிட்ட இந்நாடுகளில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே திருமண வயதெல்லை பதினெட்டாக நிர்ணயித்துளார்கள்.

ஆனால் எமது நாட்டு சூழ்நிலை அதற்கு முற்றிலும் மாறுபட்டதாகும். கல்வியை பூர்த்தி செய்தபின்புதான் திருமணம் செய்து வைக்கப்படுகின்றது.

இங்கே பலாத்காரமாக பெற்றோர்கள் திருமணம் செய்து வைப்பதில்லை. அதனால் திருமண வயதெல்லையை நிர்ணயிக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை.

இவ்வாறு திடீரென முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வயதெல்லையை தீர்மானிப்பதற்கான தேவை என்ன ? அவ்வாறாயின் இதற்குரிய நியாயத்தினை மக்களுக்கு ஏன் எத்திவைக்கவில்லை ?

ஒரு பெண் பருவம் அடைகின்றபோது அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இயற்கையாக தனது கட்டளைப்படி இறைவன் காண்பிக்கிறான்.

அப்படியிருக்கும்போது இறைவனுக்கு சவால்விடுவது போன்றுதான் இந்த தீர்மானம் அமைகின்றது.

மேலே கூறப்பட்ட பாகிஸ்தான், வங்காளதேஸ், மொரோக்கோ போன்றவைகள் இஸ்லாமிய நாடுகள் என்பதனால் இவ்வாறான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இஸ்லாத்துக்கோ, அதன் நடைமுறைக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.

ஆனால் எமது நாட்டு சூழ்நிலை அப்படியல்ல. இங்கே இஸ்லாத்தை குழிதோண்டி புதைத்து இஸ்லாமியர்களை நாட்டைவிட்டு எவ்வாறு வெளியேற்றலாம் என்று பேரினவாதிகள் திட்டமிட்டு வருகின்றார்கள்.

இந்த சூழ்நிலையில் நாங்கள் இவ்வாறான சட்டங்களில் திருத்தம் செய்கின்ற நிலைமைக்கு வந்தால் அது எங்களது பலயீனமாக கருதப்படும்.

எதிர்காலங்களில் ஒவ்வொன்றாக திருத்தம் செய்யும்படி அழுத்தம் வழங்க முற்படுவார்கள். அதனால் எமது தனியார் சட்டம் முழுமையாக துடைத்தெறியப்படும் அபாயம் உள்ளது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

இறுதியில் அல்-குராணிலும் திருத்தம் செய்யும்படி கூறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்கும் எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா என்பதுதான் எங்களது கேள்வியாகும்.

இதனால் எமது எம்பிக்கள் இஸ்லாத்தினை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது எமது மக்களின் விருப்பமாகும்.

இது சிங்கள-பௌத்த நாடு என்பதை அவர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். கன்னியாப் பிரச்சினை தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் சிங்கள பௌத்த மக்களுக்கே இருக்கின்றது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர்.

கன்னியாவில் அமைதிவழியில் போராடிய தமிழ் மக்கள் மீது சிங்களவர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது:

பிரச்சினைகளுக்குப் போராட்டம் என்ற பெயரில் அச்சுறுத்தல் விடுவிப்பதோ அல்லது வன்முறைகளில் இரு இனத்தவர்களும் இரு மதத்தவர்களும் ஈடுபடுவதோ அழகல்ல.

இந்த ஆட்சி இனக்கலவரத்துக்கும், மதத்கலவரத்துக்கும் தூபமிட்டுள்ளது. விரைவில் ஆட்சி மாற்றம் இடம்பெறும். பௌத்த தேரர்களின் பங்களிப்புடன் சிங்கள ஆட்சி விரைவில் மலரும்.
அந்த ஆட்சியில் சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின இனத்தவர்களும் ஒற்றுமையாக வாழும் நிலமையை நாம் உருவாக்குவோம்-என்றார்.

எஸ்.எச்.எம்.பிர்தௌஸ்

தமிழ் பேசும் இனங்கள் ஒருமித்து போராட முன்வரவேண்டும்!

பேரினவாதம் பௌத்த காவிகளுக்குள் மறைந்துகொண்டு சிறுபான்மை பிரதேசங்களை காவு கொள்வதை அனுமதிக்க முடியாது ! தமிழ்பேசும் இனங்கள் இணைந்து தடுக்க வேண்டும் !.

முஸ்லிம் தமிழ் பிரச்சினைகளை சிற்றின ஏவல் ஏஜென்டுகளான கருனா வியாளேந்திரன் கோடிஸ்வர்ன் போன்றவர்களை வைத்து தமிழ் முஸ்லிம் பகுதிகளில் உருவாக்கிவிட்டு அவர்களிடையே பகைமை உணர்வுகளை விதைத்து விட்டு அறவே சிங்களவர்களே இல்லாத பிரதேசங்களில் விகாரைகளை உருவாக்கி தமிழர் பகுதிகளை துண்டாடும் காரியத்தை பேரின பௌத்த இனவாதிகள் மிக நுணுக்கமாக மேற்கொள்ள முனைவதே கன்னியாவில் இப்போது அரங்கேறுகிறது ,

கல்முனையில் முஸ்லிம்களின் பூர்வீகத்தை கூறுபோட இனவாத ஏஜன்டுகளான வியாளேந்திரன் கும்பலை தூண்டி அதற்கு தாங்களும் உண்ணாவிரதிகளாக அமர்ந்து தமிழர்களிடம் நல்ல பெயர் வாங்க முயன்ற பேரினவாத பௌத்த கும்பல் இப்போது கன்னியாவில் ஆடும் நாடகத்துக்கு இப்போது தமிழர் துரோக கூட்டமான இந்த வியாளேந்திரன் கும்பல் என்ன எதிர்வினையாற்ற போகிறது என்பதை தமிழர் சமூகம் அவதானிக்க வேண்டும் ,

தமிழர் தரப்பிலும் முஸ்லிம் தரப்பிலும் உள்ள சிறுபான்மை ஒற்றுமையை விரும்பாத சக்திகளை ஆங்காங்கு போசித்து வளர்க்கும் இனவாதம் மிதவாத இரு சமுக ஒற்றுமையை சீர்குலைக்க என இருபகுதிகளிலும் ரனில் அரச எதிர்ப்பு என்ற பெயரில் களமிறக்கப்பட்டு ஊடகங்களில் அத்தகையோருக்கு பலத்த ஊடக அனுசரணைகளையும் வழங்கி வருவது யாரும் அறியாத விடயமல்ல ,

எனவே சிறுபான்மை தமிழ் முஸ்லிம் சமுகங்கள் தற்போதைய நிலைமையின் பாரதூரங்களையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் உணர்ந்து தங்களுக்குள் பகையுணர்வுகளை வளர்க்காது புரிந்துணர்வுடன் செயற்பட்டு சிறு சிறு பிரச்சினைகளை பெரிது படுத்தி பேரின ஏஜன்டுகளுக்கும் காலத்துக்கு காலம் கடசி மாறும் பச்சோந்தி தலைமைகளை வளர்க்க உதவாது அரசியல் சாணக்கியத்துடன் உள்ளக முடிவுகளை கண்டு பேரின பௌத்த ஆதிக்கத்தை சிறூபான்மை பிரதேசங்களில் இருந்து துடைத்தெறியவும் ,

தேசிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறுபான்மை விரோத எதிர்ப்பு கும்பலை பலமிழக்க வைக்க அரசியல் அழுத்தங்களை சர்வதேச ரீதியாக வழங்கவும் சிறுபான்மை இனங்கள் என்ற வகையில் காலம் தாழ்த்தாது ஒன்று பட வேண்டும்,

இதுவே எதிர்கால ஜனநாயகத்துக்கும் சிறுபான்மை இன இருப்புக்கும் நிரந்தர பாதுகாப்பை வளங்கும்.

நினைவுப் படிகம் திரை நீக்கம்

ஒரு சமூகத்தில், நிலைத்திருக்கும் இருப்பியலை உறுதிப்படுத்தும் சக்தியாக இருப்பது அதன் வரலாறும் வாழ்வியல் தடயங்களுமே. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களின் இதயமாகக் கருதப்படும் கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் நெடும் வரலாறு கொண்ட ஒரு புராதனப் புனிதத்தலமே கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல், நாகூர் ஆண்டகை தர்கா ஆகும்.

இத்தர்கா ஒரு “புனிதத்தலம்” என்ற கருத்தியலுக்கு அப்பால், இம்மண்ணோடு இரண்டறக் கலந்திருக்கும் எம் வாழ்வையும் அதனோடு இணைந்த சமூக, பொருளாதார, அரசியல் இருப்பையும் பலப்படுத்தும் ஒரு வரலாற்றுத் தளமாகவும் இருந்து வருகிறது.

கல்முனை மண்ணின் வரலாறுகளை, அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியில் இதுவரை காலமும் அசிரத்தையாக இருந்த காரணத்தினால் எமது பாரம்பரிய உரிமைகளையும் தடயங்களையும், அடையாளங்களையும் இழந்த, தேடலற்ற சமூகமாக மாறி வருகிறோம்

கல்முனைக்கான பூர்வீகத்தையும் அந்த மக்கள் கொண்டுள்ள வாழ்வியல் கௌரவத்தையும் தொடர்ந்து பாதுகாக்கவும் அவற்றிற்கெதிரான சவால்களை முறியடிக்கவும் வேண்டுமாயின் எமது ஒவ்வொரு வரலாற்று முதுசங்களையும் அவற்றின் பின்னணிகளையும் செம்மையாக ஆவணப்படுத்தி ஒரு கோர்வையாக்க வேண்டிய தேவையும் அவசரமும் இன்று பலராலும் உணரப்பட்டிருக்கிறது.

அவ்வகையில் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இதன் அவசியத்தை ஆழமாகச் சிந்தித்து கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் கிடைத்த பேறுதான் இன்றைய நினைவுப் படிக முதற்கட்ட நிகழ்வு!
அல்ஹம்துலில்லாஹ் !!

வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் கலந்து சிறப்பித்துப் பெருமை கொள்ளுமாறு ஏற்பாட்டுக்குழு சார்பில் மனமுவந்து அழைக்கின்றோம்

காலம் : 20.07.2019 (சனிக்கிழமை)

நேரம்: இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ( இரவு 8.00 மணி

இடம்: கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் முன்றல்,

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்,
கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகம்  மற்றும்
கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம்

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, அமைச்சர் வஜிர அபேவர்ண இடையில் சந்திப்பு

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிக்கும் அமைச்சர் வஜிர அபேவர்ணவுக்குமிடையிலான சந்திப்பு இன்று (15) திங்கட்கிழமை அவரது அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் நிரந்தர தீர்வு காணல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதுடன் கணக்காளர் நியமனம் தொடர்பிலும் பல்வேறு கருத்தாடல்களும் இடம்பெற்றது.

மேலும் இதன்போது தோப்பூர் மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், அலி சாஹிர் மௌலானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சீ ஏ ஜெசீகரன்
 
அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி; மைத்திரிக்கு எதிராகவும் போர்க்கொடி

"நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி."

- இவ்வாறு தெரிவித்தார் மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ராதேவி வன்னியாராச்சி.

அவர் மேலும் கூறியதாவது:-

"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்பினர்கள் எவ்விதத்திலும் சம்மதம் தெரிவிக்கமாட்டார்கள். எந்தவொரு வேட்பாளர் களமிறங்கினாலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு அது சவாலாக இருக்காது.

இதேவேளை, ஜனாதிபாதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி. ஏனெனில், அந்தக் கட்சிக்குள் மூவர் வேட்பாளர்களாகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்கள். இதனால் இப்போதே அந்தக் கட்சிக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன" - என்றார்.