எம். ஏ. எம். நிலாம்
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்தும் அடுத்து மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.
கடந்த மாதம் 3 ஆம் திகதி பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகளையடுத்து முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்பது பேரும் அரசிடம் நியாயம் கோரி ஒரு மாதகாலக்கெடு விதித்து தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். அந்தக் காலக்கெடு இம்மாதம் 3 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையிலும் தமது கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிட்டாததன் காரணமாக இரண்டு பேரைத் தவிர ஏனைய ஏழு பேரும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஏலவே கபீர் ஹாசிம், எம். எச். ஏ. ஹலீமும் அமைச்சுப் பதவிகளை ஏற்றிருந்தனர்.
இவ்வாறான நிலைமையில் சிரேஷ்ட அரசியல் தலைவர் ஏ. எச். எம். பௌசியின் ஏற்பாட்டில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிரேஷ்ட முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலருக்கும் இடையில் நேற்றுக்காலை விசேட சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, முஜிபுர் ரஹ்மான், எம். எஸ். எஸ். அமீர் அலி ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சிரேஷ்ட தலைவர் பௌசியின் வீட்டில் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் இரண்டரை மணி நேரம் இடம்பெற்றது. முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள பல்வேறுபட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. ஏப்ரல் 21 க்குப் பின்னரான சவால்கள், கடந்த மாதத்தில் இடம்பெற்ற வன்முறை தாக்குதல்கள், முறைகேடான கைதுகள், பொதுபல சேனாவின் செயற்பாடுகள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுடன், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து இரண்டொரு தினங்களுக்கிடையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்துப் பேசவிருப்பதாகவும் அதன் பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பார்களென ஏ. எச். எம். பௌசி தெரிவித்தார்.
TKN
Post A Comment: