சம்பிரதாய முஸ்லிம்கள் மாறியிருக்கிறார்கள்
சம்பிரதாய முஸ்லிம்கள் எவ்வளவு மாறியிருக்கிறார்கள் என்பதை அண்மைய தாக்குதல்களில் அறிந்து கொண்டோம். கடந்த காலங்களில் விட்ட எச்சரிக்கைகளை பற்றி பேசாமல் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒழிக்க நாம் செயற்பட வேண்டும்.
இலங்கை உலமா சபை 4பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது. அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல வேண்டி வரலாமென நான் கூறிவைக்க விரும்புகிறேன் என்று பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.
பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் கண்டி போகம்பரை மைதானத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது,
இது சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இதனால் கோபிக்க கூடாது. எல்லாவற்றுக்கும் போல நாட்டுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும். நாங்கள் தான் வரலாறு கட்டியெழுப்பிய இனம். நாங்கள் கள்ளத்தோணி அல்ல. உலகில் சிறுபான்மை என்றாலும் நாங்கள் கௌரவமான இனம்.
இன்று எமது வீட்டிற்குள் விஷப்பாம்பு வந்துவிட்டது. வீட்டிற்குள் இருக்கும் பாம்பை நாங்கள் வெளியேற்ற வேண்டும். அதில் வீட்டுக்குள் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் இவ்வருடம் இதுவரை எட்டாயிரம் பேர் வரை உலகில் கொல்லப்பட்டுள்ளனர். அப்படியான அடிப்படைவாதம் இது.
சிங்கள அரசை அமைப்போம். சிங்களவர்கள் விரும்பும் அரசை ஏற்படுத்துவோம். பாராளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்துவோம். சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருக்க வேண்டும்.
சிங்களவருக்கு ஏற்ற சட்டங்கள் தேவை. அதற்கு நமக்கான பாராளுமன்றம் வேண்டும்.
காவிகளின் பலத்துடன் நாம் இந்த நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்லலாம் என்றார்.
அதேவேலை நேற்று கண்டி போகம்பரை மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் 9தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
1. எமது சிங்கள இராஜ்ஜியத்தை மீளமைத்தல்
1815ஆம் ஆண்டு சிங்கள அரசாங்கத்துக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் கண்டியில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் எம்மிடமிருந்து பறிக்கப்பட்ட சகல மரபுரிமைகளை வெற்றிக் கொள்வதற்காக சிங்கள இராஜ்ஜியமொன்றை மீளமைக்க வேண்டும். சிங்கள மொழிபேசும் அனைத்து இனத்தவரையும் இணைத்து ஒரு இனமாக பலப்படுத்துவது.
2. ஒரே நாடு, ஒரே இனம், ஒரே சட்டம்
மேலேத்தேயர்களின் சட்டத் திட்டங்களுக்குப் பதிலாக எமது தனித்துவத்தை பாதுகாக்கக் கூடிய அரசியலமைப்பொன்றையும், நீதி கட்டமைப்பொன்றையும் புதிதாக உருவாக்க வேண்டும். ஒவ்வொரு மதத்திற்கும் இனத்திற்கும் இருக்கும் தனித்தனியான சட்டங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும்.
3. புத்தசாசனத்தை பாதுகாத்தல்
புத்தசாசனத்தை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் தலையீட்டை பலப்படுத்த வேண்டும். அடிப்படைவாத மதக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டும்.
4. தேசிய பாதுகாப்பு
தனியான சட்டங்கள் வங்கிமுறைகள், நீதிமன்றம் ஊடாக தனியான கலாசார இராஜ்ஜியங்களை உருவாக்க முயற்சிப்பது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். இதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
5. தேசிய மரபுரிமைகளை பாதுகாத்தல்
எமது வரலாற்றையும், தொல்பொருள் ஆதாரங்களையும் அழிப்பதை கட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
6. பலமான நிரந்தர பொருளாதாரம்
தற்போதைய பொருளாதார கட்டமைப்பு மற்றும் பொருளாதார செயற்பாட்டால் சிங்களவர்களுக்கு வரையறுக்கப்பட்ட இடமே இருக்கிறது. இந்நிலைமை மாற்றி பொருளாதாரத்தினுல் இருக்கும் இனவாத, மதவாத முறைகளை தடைசெய்ய வேண்டும்.
7. தேசப்பற்றுள்ள கல்விமுறை
எமது கல்விமுறையானது எதிர்கால சந்ததியை பலவீனப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது. மத,இன அடிப்படையிலான பாடசாலைகள், கல்வி நிறுவனங்களை தடைசெய்ய வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் அடங்கலான கல்வி நிறுவனங்களில் மத அடிப்படைவாதத்தை முன்னெடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும்.
8. வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள்
பெரும்பான்மையான சிங்கள தாய்மாரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் கருத்தடை செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். சகல இனங்களுக்கும் பொதுவான குடும்பக் கட்டுப்பாட்டு முறையை முன்னெடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்.
9. சுகாதாரம் மற்றும் போஷாக்கு
சகல பிரஜைகளுக்கும் போதுமான வசதிகளை பெற்றுக்கொடுப்பதை அடிப்படை உரிமையாக கருத வேண்டும்.
ஹலால் போன்ற மதரீதியான உணவு சான்றிதழ் முறைகளை சிங்கள மக்கள் மீது பலாத்காரமாக திணிப்பதை தடுத்து அவ்வகையான சான்றிதழ்கள் தேவையானவர்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
மேற்படி ஒன்பது தீர்மானங்களே இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
TKN
Post A Comment: