தென்னாபிரிக்க சுதேச மக்களான கறுப்பு இனத்தவரின் விடுதலைக்காகப் போராடிய மாபெரும் தியாகியான நெல்சன் மண்டேலாவின் 101வது பிறந்த தினம் இன்றாகும்.நெல்சன் மண்டேலா, 'க்ஸோசா' என்ற ஆபிரிக்க பழங்குடி இனத்தில் ஜூலை 18, 1918 இல் பிறந்தார்.அப்போது அவருக்கு வைத்த பெயர், ’ரோலிஹ்லஹ்லா’ (Rolihlahla).

இந்த பெயருக்கு 'பல கிளைகளுடைய மரம்’ அல்லது 'பிரச்சினைகளை உருவாக்குபவர்’ என்று அர்த்தம். இந்த பெயர் மாற்றப்பட்டதற்கு அதன் அர்த்தம் காரணமல்ல. உச்சரிக்க கடினமாக இருந்ததால் அவருடைய ஆரம்பப் பாடசாலை ஆசிரியை, 'நெல்சன்’ என மாற்றி வைத்தார். ஆபிரிக்க மாணவனுக்கு ஆங்கிலப் பெயர் வைக்கக் காரணம் அந்த ஆசிரியை ஆங்கிலேயப் பெண். 1920களில் தென்னாபிரிக்காவில் குடியேற்ற ஆட்சி நடந்து வந்தது.

1992இல் வெளியான ஸ்பைக் லீயின் 'மால்காம் எக்ஸ்’ என்ற வரலாற்றுப் படம் மண்டேலாவை கௌரவப்படுத்தி எடுக்கப்பட்டது.1973 ம் ஆண்டில் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையால் அணுக்கருவில் உள்ள துகள் ஒன்றுக்கு ‘மண்டேலா துகள்’ என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கேப் டவுனிலிருந்து கலிபோர்னியா வரை உள்ள ஒரு தெருவுக்கு மண்டேலாவின் பெயரிடப்பட்டுள்ளது. அசாதாரணமான சில அஞ்சலி பொருள்களுக்கும் அவரின் பெயரிடப்பட்டுள்ளது. வரலாற்றுக்கு முந்திய காலத்தில் வாழ்ந்த அபூர்வமான ஒரு மரங்கொத்தி பறவை இனத்துக்கும் ‘ஆஸ்ட்ரோலோபிகஸ் நெல்சன் மண்டேலா’ என சமீபத்தில் பெயரிடப்பட்டுள்ளது.

இவையெல்லாம் அவருக்கு அளிக்கப்பட்ட கௌரவங்கள் ஆகும்.

மண்டேலா ஒரு மாறுவேட மன்னர். நிறவெறிக்கு எதிராகப் போராடிய காலங்களில் அவர் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக சாரதி உட்பட்ட பல மாறுவேடங்கள் போட்டு பொலிசார் கண்களில் மண்ணைத் தூவினார். 'சுதந்திரத்தை நோக்கிய நீண்ட நடை’ என்ற தனது சுயசரிதையில், "நான் ஒரு இரவு உயிரினம், பகலில் பதுங்கி இரவில் என் இலட்சியப் பணிகளை தீவிரப்படுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

போராட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டு, குத்துச்சண்டையில் பேரார்வம் கொண்டவர். அதுபற்றி அவர் சுயசரிதையில் கூறும்போது, ‘நான் குத்துச்சண்டையில் உள்ள வன்முறையை வெறுக்கிறேன். அதேசமயம், அதில் உள்ள அறிவியல் பயனுள்ளது. நம்மை தாக்குபவரிடம் எப்படி தற்காத்துக் கொள்வது, அவசியம் ஏற்பட்டால் எப்படித் தாக்குவது. சண்டையின் போது வேகக் கட்டுப்பாட்டை பெறுவது போன்ற முன்னெச்சரிக்கையை அதில் உள்ள அறிவியலாக கருதுகிறேன்’ என்றார் மண்டேலா.

மண்டேலாவின் பெயர் அமெரிக்காவின் தீவிரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் 2008ம் ஆண்டு வரை அவருடைய 89 வயதிலும் இருந்தது. நிறவெறிக்கு எதிரான போர்க்குணம் இருந்ததால், மண்டேலா உட்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உறுப்பினர்களின் பெயர்களும் அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தன.

சிறுவயது முதலே வெள்ளையர்களின் அடக்குமுறை ஆட்சியின் கொடுமைகளைக் கண்டு வந்த மண்டேலா தனது சட்டக்கல்வியை 1941-ம் ஆண்டு முடித்தார். இவர் தன்னுடைய 21வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து, ஆங்கில ஆட்சியின் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்த்தார். தென்னாபிரிக்காவின் கனிம வளங்களைக் கொள்ளையிட வந்த கூட்டம், அந்த மண்ணின் மக்களையே அடிமைப்படுத்தி விலைக்கு விற்பதை தடுக்கப் போராடினார். அதற்காக 1943-ம் ஆண்டு 'ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்' எனும் இயக்கத்தில் சேர்ந்தார். இவரது அயராத போராட்டங்களின் தீவிரங்களைக் கண்டு வெள்ளையர் ஆட்சி அதிர்ந்து போனது. 1956-ம் ஆண்டு இவரை கைது செய்து சிறையில் அடைத்தது. நான்காண்டு விசாரணைக்குப் பின்னர் விடுதலை செய்தது.

சிறைவாசத்துக்குப் பிறகு இவரது விடுதலைப் போராட்ட செயல்கள் தீவிரமாகின. முழுமையான விடுதலை கோரிய இவரது போராட்டங்கள் வெள்ளையர் அரசின் அத்திவாரத்தை தாக்கின. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கிய நெல்சன் மண்டேலாவின் அதிரடித் தாக்குதல்கள் அங்கிருந்த வீர இளைஞர்களை வீறு கொண்டு எழச் செய்தன. தென்னாபிரிக்க தேசமே விடுதலை தீப்பற்றிக் கொண்டு எரிந்தது. இதனால், மீண்டும் 1962-ம் ஆண்டு கைதான நெல்சன் மண்டேலாவுக்கு 1964-ம் ஆண்டு ஜூன் 12 அன்று ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 27 ஆண்டுகள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டார். இளமையெல்லாம் கழிந்து போன பிறகு 11.2.1990 அன்று விடுதலையானார். இவரோடு தென்னாபிரிக்காவின் விடுதலையும் உறுதியானது.

1994-ம் ஆண்டு நடந்த முதல் ஜனநாயகத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று தென்னாபிரிக்காவின் ஜனாதிபதிஆனார் நெல்சன் மண்டேலா. உலக சமாதானத்தையும் விடுதலை கொண்ட மக்கள் கூட்டத்தையும் விரும்பிய மக்கள் தலைவர் தனது 95வது வயதில் மரணமடைந்தார். ஆனால், இன்னமும் மக்கள் மனதில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 'நோபல்' உள்ளிட்ட உலக விருதுகள் பலவற்றைப் பெற்ற நெல்சன் மண்டேலா, தியாகத்தின் அடையாளமாக, அமைதியின் சின்னமாகவே வாழ்ந்தார். அவரின் பிறந்த நாளை உலகின் பல நாடுகள் இன்று நினைவு கூருகின்றன.

'கல்வி என்னும் ஆயுதம் உலகை மாற்றும் சக்தி வாய்ந்தது', 'ஒருவர் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை, ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது மீண்டு எழுவதில்தான் புகழ் பெறுகிறார்' என்பவை அவர் உதிர்த்த சிறந்த பொன்மொழிகளில் சிலவாகும்.

உலக அமைதிக்காக நெல்சன் மண்டேலா ஆற்றிய அரும்பணியைப் பாராட்டி அவருக்கு 'நேரு சமாதான விருது' வழங்கியது இந்தியா. ஆனால் அவர் சிறையில் இருந்த காரணத்தினால் அவரது சார்பில் அவருடைய மனைவி வின்னி மண்டேலா டெல்லிக்கு வந்து அந்த விருதினை ஏற்றுக் கொண்டார். அத்துடன் நெல்சன் மண்டேலாவிற்கு இந்தியாவின் 'பாரத ரத்னா' விருதையும் 1990இல் வழங்கி இந்தியா அவரைக் கௌரவித்தது. இந்தியர் அல்லாத ஒருவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது என்ற சிறப்பைப் பெற்றவர் நெல்சன் மண்டேலா.

தென்னாபிரிக்க டர்பன் நகரில் உள்ள மகாத்மா காந்தி அறக்கட்டளை மற்றும் சத்யாக்கிரக அமைப்பு அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான 'மகாத்மா காந்தி சர்வதேச விருதை' நெல்சன் மண்டேலாவுக்கு வழங்கியுள்ளது. உலக அமைதிக்கான 'நோபல் பரிசும்' 1993ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

மனித உரிமைகளை மேம்படுத்துதல், ஆண்-பெண் சம உரிமைக்குப் பாடுபடுதல், பல்வேறு மனித இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் மலர வேண்டித் தொண்டாற்றுதல் என மக்கள் நலனை முன்னிறுத்தி சேவை செய்த நெல்சன் மண்டேலாவின் உழைப்பைப் போற்றுவதற்காக அவரது பிறந்த நாளான ஜூலை 18ஆம் திகதியை அனைத்துலக நெல்சன் மண்டேலா தினமாக 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தது. இவ்வறிவிப்பைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு முதல் 'அனைத்துலக நெல்சன் மண்டேலா தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது.

"யாரும் பிறக்கும் பொழுதே நிறத்திற்காகவும், மதத்திற்காகவும், பிற பின்புலத்திற்காகவும் மற்றவரை வெறுக்கும் எண்ணத்துடன் பிறந்ததில்லை, ஒருவர் அவ்வாறு வெறுக்கக் கற்றுக் கொண்டாரானால் அவரை விரும்புவதற்கும் பழக்கப்படுத்த முடியும், ஏனெனில் அன்பு செலுத்துவது என்பது வெறுப்பதை விட மக்களுக்கு இயல்பாக வருவது", என்ற அவரது பொன்மொழியை இந்த நாளில் நினைவு கூர்வது பொருத்தமாகும்.

நன்றி தினகரன்

Post A Comment: