ஏ.எல்.நிப்றாஸ்

முஸ்லிம் அரசியல்வாதிகள், வைத்தியா் மற்றும் முஸ்லிம்களின் தனித்துவ அடையாளங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யாகும் என்றால்... இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவா்கள் அதற்கு என்ன பரிகாரம் செய்வார்கள்?

வாக்குமூலங்கள்!


குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கும் நபரிடம் அல்லது சாட்சியம் சொல்ல வருபவரிடம் 'நான் சொல்வதெல்லாம் உண்மை' என்று சத்தியப்பிரமாணம் வாங்குகின்ற நடைமுறை உலகின் பல நாடுகளில் இருக்கின்றது. ஆனால், இந்த வழக்குகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தோர் உண்மையைத்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.

நீதித் துறையும் நீதி தேவதையும் நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டும் எனவும், நீதிபதிகள் பக்கச்சார்பாக இருக்கக் கூடாது என்றும் எதிர்பார்க்கின்ற உலகம், வழக்கொன்றில் வாதாடும் சட்டத்தரணிகள் உண்மையை மாத்திரமே பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கூட கொண்டிருப்பதில்லை.
'ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது' என்பதை நீதித் துறையின் எழுதப்படாத விதியாகக் கொண்டாடும் நாம், எத்தனையோ குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக உலவுவதையும் பொய்ச்சாட்சியங்களால் நிரபராதிகள் தண்டிக்கப்படுவதையும் வரலாற்றில் கண்டிருக்கின்றோம்.

இவ்வாறு குறிப்பிடுவதற்காக, இக்கட்டுரையில் விபரிக்கப்படும் நபர்கள் சுற்றவாளிகள் என்று பரிந்துபேச முயற்சிக்கவில்லை. மாறாக, அபாண்டங்களும் கட்டுக்கதைகளும் சுமத்தப்படுவதாலும், சிறிய தவறுகள் உருப்பெருப்பிக்கப்பட்டு வேறு திசைக்கு திருப்பப்படுவதாலும் ஏற்படும் சமூக விளைவுகள் பற்றி பொறுப்புடன் சிந்திக்க வேண்டும் என்பதுடன், குற்றச்சாட்டுக்குள்ளானோர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டால் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு பொறுப்புக் கூற வேண்;டும் என்பதையே வலியுறுத்த விளைகின்றது.

முஸ்லிம்களின் கஷ்டகாலம்

முஸ்லிம்களுக்கு கஷ்டகாலம் ஆரம்பித்து பல வருடங்களாயிற்று! ஆனால், தமிழர்களைப் போல முஸ்லிம்கள் தங்கள் மீதான இனத்துவ நெருக்குவாரங்களின் ஊடாட்டங்களை முன்னரே உய்த்தறிந்து கொள்ளவில்லை. இஸ்லாத்தின் மீது உலக நாட்டாமைகள் ஓரவஞ்சனையுடன் செயற்படுவதைப் போன்று, இப்போது இலங்கையில் முஸ்லிம்களை வேறு வேறு வழிகளின் ஊடாக நெருக்குவாரப்படுத்துவதற்கான முயற்சிகள் வெளிப்படையாகவே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

'முஸ்லிம்கள் பழிவாங்கப்பட வேண்டியவர்கள், அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டத் தேவையில்லை. அவர்கள் இந்த நாட்டிற்கும் இன ஐக்கியத்திற்கும் எதிரானவர்கள்' என்ற தோற்றப்பாட்டை கட்டமைப்பதன் ஊடாக, முஸ்லிம் சமூகத்தின் மீதான இன, மத அடிப்படையிலான அத்துமீறல்களை நியாயப்படுத்துவதற்காக பலவகையான 'இனவாதங்கள்;' மேற்கொள்ளும் பகீரத பிரயத்தனங்கள் பல எதிர்விளைவுகளை உண்டுபண்ணுகின்றன.

கடந்த அரசாங்கங்களைப் போலவே, முஸ்லிம்களின் பேராதரவுடன் தெரிவு செய்யப்பட்ட இன்றைய அரசாங்கத்தின் இரட்டை வேடமும், உள்ளொன்று புறமொன்று வைத்துச் செயற்படும் ஆட்சியாளர்களின் அணுகுமுறையும், அரசாங்கத்தை ஆட்டுவிக்கும் காவி அரசியலும், சட்டமும் ஒழுங்கும் எல்லோருக்கும் சமம் என்ற நியதியானது எழுத்தில் மட்டுமே இருப்பதுவும்.... இத்தகைய செயற்பாடுகளுக்கு ஊக்கமருந்தாக அமைந்திருக்கின்றன எனலாம்.

மறுபுறத்தில், முஸ்லிம் அரசியல்வாதிகள் இதுவரை காலமும் வெளிப்படுத்திய சமூக அக்கறையற்ற, சூடுசுரணையற்ற போக்குகளும், பதவி மற்றும் பண ஆசையும், முஸ்லிம் தனித்துவ அடையாள அரசியலை நாசமாக்கியிருக்கின்றது. பெருந்தேசியம் முஸ்லிம்களை 'பதவி பட்டம் போன்ற அற்ப சலுகைகளுக்குப் பின்னால் வரும் சமூகமாக' குறைமதிப்பீடு செய்ய இது காரணமாகியிருக்கின்றது.

இவை எல்லாவற்றுக்கும் மேலதிகமாக, மதபோதை பிடித்த சஹ்ரான் குழுவினரின் எதிர்விளைவுகள் பற்றிச் சிந்திக்காத முட்டாள்தனமான செயற்பாடுகள் அதேபோல், முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவியிருக்கும் புதுப்புது இயக்கங்கள், நிதி உதவிகள் பற்றி முஸ்லிம் சமூகம் உள்ளக மீள்வாசிப்பொன்றை மேற்கொள்ளத் தவறியமை போன்ற நிலைமைகள் இலங்கை முஸ்லிம்கள் மீதான நெருக்கடிகளை நியாயப்படுத்துவதற்கு காரணமாகியிருக்கின்றது என்பதை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை.

கிடைக்கின்ற தகவல்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் எல்லாம் கைமீறிப் போன பிறகு களத்தில் இறங்கும் பாதுகாப்பு தரப்பில் சிலரது செயற்பாடுகளும், கடும்போக்கு மற்றும் மென் இனவாதத்தினால் ஆட்டுவிக்கப்படும் பெருந்தேசியக் கட்சிகளும், உள்ளக மறைமுக நிகழ்ச்சி நிரல்களுக்காக எதையும் செய்யத் துணியும் பெரும்பான்மை அரசியல் தலைவர்களும் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்பதை மறந்து, மிதப்பில் இருப்பதாகத் தெரிகின்றது.

இருவகை யுத்தம்


இந்தப் பின்னணியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் உடமைகளை இலக்குவைத்து பௌதீக ரீதியிலான தாக்குதல் மேற்கொண்ட சமகாலத்தில், முஸ்லிம் சமூகம் உளவியல் ரீதியாக பலவீனப்பட்டுப் போயிருக்கும் இன்றைய காலப் பகுதியில்; இச் சமூகத்திற்கு எதிராக உளவியல் யுத்தமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு அங்கமாகவே, முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் படலத்தை நோக்க வேண்டியிருக்கின்றது. இதன்மூலம் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமன்றி கிட்டத்தட்ட முழு முஸ்லிம் சமூகமும் குற்றவாளிக் கூண்டை நோக்கி உந்தித் தள்ளப்படுகின்றது. இதேவேளை, இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்தியவாறு, பௌத்த துறவிகள் சிலர் உள்ளிட்ட கடும்போக்கு செயற்பாட்டாளர்கள் வீதிக்கு இறங்கியிருக்கின்றமை இனங்களுக்கு இடையில் பௌதீக அடிப்படையிலான முரண்பாடுகளை முடுக்கி விடுவதற்கான சூட்சுமங்களாககவே தெரிகின்றன.

எது எவ்வாறிருந்த போதும், கடும்போக்கு சக்திகள் பொதுவாக முஸ்லிம் சமூகத்தை நோக்கியும் குறிப்பாக சில அரசியல்வாதிகள் மற்றும் ஆளுமைகளுக்கு எதிராகவும் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யாகி, நிரூபிக்க முடியாததாகி அல்லது வலுவலிழந்து போவதே நிதர்சனமாக இருக்கின்றது.

எனவே, தம்மிடம் கையில் ஆதாரங்கள் இருக்கின்றது என்று கூப்பாடு போட்ட கடும்போக்கு அரசியல்வாதிகள், இதோ நிரூபித்துக் காட்டுகி;ன்றோம் என்று சவால்விட்ட இனவாத அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இப்போது என்ன செய்யப் போகின்றார்கள்? ஒருவேளை, தம்மால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எல்லாம் சோடிக்கப்பட்டதாக ஆகுமிடத்து, இந்த கட்டுக்கதைகளால் முஸ்லிம்களுக்கும், இனநல்லிணக்கத்திற்கும், இந்த நாட்டுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இழப்புக்களுக்கு அவர்கள் என்ன விலை செலுத்தப் போகின்றார்கள் என்ற கேள்வி இன்று நம்முன் எழுந்துள்ளது.


தொடர் குற்றச்சாட்டுக்கள்

பெயர்குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கடும்போக்கு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் இலங்கை முஸ்லிம்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர். முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள், அவர்களது சனத்தொகை பெருக்கம் அளவுக்கதிகமானது, இஸ்லாமிய (பெயர்தாங்கி) பயங்கரவாதம் இலங்கையில் ஊடுருவியுள்ளது, முஸ்லிம்கள் சிங்களவர்களின் இனப் பெருக்கத்தை தடுக்க முயற்சிக்கின்றனர், முஸ்லிம்கள் தேசப்பற்று இல்லாதவர்கள், மத்ரசாக்களில் அடிப்படைவாதம் போதிக்கப்படுகின்றது, ஹலால் உணவை ஏனைய சமூகத்தவருக்கு திணிக்கின்றனர், இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட இஸ்லாமிய கோட்பாடுகள் வளர்க்கப்படுகின்றன, முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவி ஒத்தாசை வழங்குகின்றனர்.... என இக் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் இதில் ஒரேயொரு குற்றச்சாட்டை மாத்திரம் முஸ்லிம்களால் மறுத்துரைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதிலும், ஏனைய அனைத்து குற்றச்சாட்டுக்களும் சோடிக்கப்பட்டவை, இனவாத அடிப்படையிலானவை என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். அவ்வாறான சில குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பது முன்னமே தெளிவாகியுள்ள நிலையில், அண்மைக்காலத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவை என்பதை காலம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை காணலாம்.

முஸ்லிம் அரசியல்வாதிகளான றிசாட் பதியுதீன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், அசாத்சாலி போன்றோர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் வைத்தியர் ஷாபி மீதான பழிச்சொல் போன்ற விவகாரங்களின் உண்மைத் தன்மையை, பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குமூலங்களும் மெதுமெதுவாக நிரூபிக்க ஆரம்பித்துள்ளதாக தோன்றுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து நாட்டில் எல்லா சமூகங்களும் இணைந்து பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டியிருந்த ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில், முஸ்லிம்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. உளவுத்தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்காத பொறுப்பு வாய்ந்தவர்களை மறந்துவிட்டு, ஒன்றுமறியா அப்பாவி முஸ்லிம்கள் மீதே பழிபோடுவதற்கு இனவாதிகள் முனைந்ததாக கவனிப்பிற்குரியது.

றிசாட் விவகாரம்


இந்த தருணத்தில் அமைச்சராக இருந்த றிசாட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. அதை நிறைவேற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றது என்றிருக்கையில், பிக்கு ஒருவர் உண்ணாவிரதத்தில் ஈடுபடச் செய்யப்பட்டார். கண்டியில் அவர் உண்ணாவிரதமிருந்தமையால் முஸ்லிம்களுக்கு ஆபத்துக்கள் வரலாம் என்று கருதி முஸ்லிம் அமைச்சர்கள் இராஜினாமாச் செய்தனர். இதனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீதான விசாரணைகளை சுதந்திரமாக மேற்கொள்வதற்கும் இடமளிக்கப்பட்டது.

றிசாட் பதியுதீன் உள்ளிட்ட மூன்று அரசியல்வாதிகள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விஷேட உயர் பொலிஸ் குழு நியமிக்கப்பட்டதுடன், றிசாட் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு தரப்பு பகிரங்கமாகவே அறிவிப்புச் செய்தது. அதற்கமைய முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. விசாரணைகளும் நடைபெற்றன.

இறுதியில், விசாரணை நடாத்திய உயர்மட்ட பொலிஸ் குழு முன்னாள் அமைச்சர் றிசாட், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதத்திற்கு துணை புரிந்ததற்கான எந்த ஆதாரமும் தமக்கு கிடைக்கவில்லை என்று பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிக்கை சமர்ப்பித்தது. இவ்வறிக்கை, பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கும் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து தெரிவுக்குழு இதுபற்றிய விஷேட அறிவிப்பொன்றை செய்தது.

அரசியல்வாதிகள் யாரும் நூறுவீதம் தூய்மையானவர்கள் என்று நாம் கூறவரவில்லை. ஆனால், தம்மிடம் கையில் ஆதாரங்களும் இருப்பவர்கள் ஏன் அவ்வாறான ஆதாரங்களை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கவில்லை? அவ்வாறு நிரூபித்திருந்தால் றிசாட்டை குற்றமற்றவராக விசாரணைக்குழு அறிவித்திருக்க மாட்டாது. அப்படியென்றால், ஒன்றில் ஆதாரம் இருப்பதாகச் சொன்னது பொய்யாக இருக்க வேண்டும். அல்லது அவை சோடிக்கப்பட்ட போலி ஆதாரங்களாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.

முன்னதாக, தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க மேற்படி அரசியல்வாதி தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கூறியிருந்த நிலையில், றிசாட் எம்.பி.யும் தெரிவுக்குழு முன் ஆஜராகி சாட்சியமளித்தார். இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அவர் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இன அடிப்படையிலானவை எனக் கூறி மறுத்துரைத்தார்.

இதேவேளை, முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அசாத்சாலி மட்டுமன்றி முஸ்லிம் சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலர் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். பொதுவாக, பயங்கரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் செயற்பட்டதை ஆதரபூர்வமாக எடுத்துக் காட்டிய அவர்கள், போலிக் குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்துள்ளனர். அத்துடன், பொறுப்புவாய்;ந்தவர்கள் புலனாய்வு தகவலை ஏன் பொருட்படுத்தவில்லை? என்று, பொதுமக்கள் மனங்களில் இருக்கும் கேள்வியை இவர்கள் தெரிவுக்குழு முன் எழுப்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

கருத்தடைக் கதை

இது இவ்வாறிருக்க, குருணாகல் வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் ஆதாரமற்றவையாகியுள்ளன. வைத்தியர் மீதான விசாரணையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வு பிரிவினர், ஷாபி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், எனவே அவரை தொடர்ந்து தடுத்துவைத்திருக்க முடியாதென்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

1000 மேற்பட்ட முறைப்பாடுகளை ஆராய்ந்து, பெருமளவானோரிடம் வாக்குமூலங்களை பெற்றும்கூட ஷாபி மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
முஸ்லிம்கள் சிங்களவர்களின் இனப்பெருக்கத்தை தடுக்க முயற்சிக்கின்றார்கள் என்ற புனைகதைகள் நீண்டகாலமாக உலவி வருகின்றன. கொத்துரொட்டி போன்ற உணவுகளில் கருத்தடை மாத்திரையை கலக்கின்றார்கள் என்றும் உள்ளாடைகளில் கருத்தடை மருந்துகளை பூசி சிங்களவர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள் என்றும் ஏகப்பட்ட பரப்புரைகள் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தப் பின்னணியில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடிய ஒரு களநிலை இருந்ததைப் பயன்படுத்தியே ஷாபி விவகாரம் ஊதிப் பெருப்பிக்கப்பட்டுள்ளது. குருணாகலில் பணிபுரிந்த வைத்தியர் ஷாபி அங்கு மகப்பேற்றுக்காக அனுமதிக்கப்பட்ட சிங்களப் பெண்கள் 4 ஆயிரம் பேருக்கு கர்ப்பம் தரிக்காதவாறு (கருத்தடை) செய்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும். முறையற்ற விதத்தில் சொத்து சேகரித்தார் என்ற சந்தேகத்தில் கைதான வைத்தியருக்கு எதிராக முறைப்பாடுகளைச் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது.

4000 பேர் கருத்தடை செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட போதும் ஆயிரத்திற்கு அதிகமானோரோ முறைப்பாடு செய்தனர். அத்துடன் பலர் பலர் தம்மை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த பின்வாங்கிதோடு, முறைப்பாடு செய்வது போல, விசாரணைக்குழுவின் கேள்விகளுக்கு பதிலளிப்பது இலேசுபட்ட காரியமல்ல என்பதையும் அவர்கள் பட்டறிந்து கொண்டனர். இந்நிலையில் அவர்களில் யாருக்கும் ஷாபி கருத்தடை செய்ததாக பொலிஸார் கண்டறிந்து, அறிக்கையிடவில்லை.
அத்துடன் டாக்டர் ஷாபியுடன் கடமையாற்றிய 70 தாதிகளில் 69 பேர் விசாரணைக்குழு முன் சாட்சியமளித்துள்ளனர். ஒரு தாதி இப்போது அதே வைத்தியசாலையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் மட்டும் சாட்சியமளிக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இவ்வாறு சாட்சியமளித்த 69 தாதியரும், 'ஷாபி அப்படி கருத்தடை செய்யவில்லை'என்று வாக்குமூலத்தி;ல் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில், ஒரு பிரசவ அறையில் ஆறேழு மருத்துவப் பணியாளர்கள் பார்த்துக் கொண்டு நிற்கையில் ஒரு வைத்தியரால் 4000 பெண்களுக்கு கருத்தடை செய்வது எவ்வகையிலும் சாத்தியமற்றது. ஒருவேளை ஒரு பெண்ணுக்காவது அவர் அவ்வாறு செய்திருந்தால்கூட ஷாபி மட்டுமன்றி, வைத்தியசாலைக்கு பொறுப்பான மகப்பேற்று நிபுணர் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும், குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும் என்ற நிலையிருந்தது. இப் பின்னணியிலேயே அவரது குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவையாக போயுள்ளன.

அவர்களையும் விசாரிக்க!

இவ்வாறு முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அடிப்படையற்றவை என்பதை வாக்குமூலங்களும் சாட்சியங்களும் எடுத்தியம்பிக் கொண்டிருக்கின்றன. இப்போது அந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த பெயர் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அரசியல்வாதிகள், இனவாத செயற்பாட்டாளர்கள், பௌத்த பிக்குகள் தங்களது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வது என்ற வெட்கத்தில் வேறு விடயங்களை பிதற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், உண்மையிலேயே யாராக இருந்தாலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது அவசியம் என்பதைப் போல பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரால் சமூகங்களுக்கு இடையில் ஏற்படும் அமைதியின்மையைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அதேபோன்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பல வருடங்களுக்கு முன்னரே இலங்கையில் பயங்கரவாதம் ஊடுருவியிருக்கின்றது என்று சொன்ன அரசியல்வாதிகள், பிக்குகள், புள்ளிவிபரத்தோடு அறிக்கை விட்டவர்கள், ஏப்ரல் 21 இற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடாத்தியவர்கள், அவர்களுக்கு துணைநின்ற எல்லோருடைய வாக்குமூலங்களையும் தெரிவுக்குழுவோ அல்லது ஏனைய விசாரணைக் குழுக்களோ பதிவு செய்வது, பிரச்சினைகளின் அடிவேரை கண்டறிய வழிவகுக்கும் என்பதை சொல்ல வேண்டியுள்ளது.

(வீரசேகரி 07.07.2019)

Post A Comment: