DR.தில்ஷான் நிஷாம்

Acid Reflux / Gastro Oesophageal Reflux Disease (GORD)

தலைப்பை ஆங்கிலத்தில் இடுவதைத் தவிர வேறு வழியில்லை; தமிழில் மொழிபெயர்த்தால் பழக்கப்படாத சொற்பதங்களைப் பிரயோகிக்க நேரிடும்!

எனது அநேக நண்பர்கள் அடிக்கடி முறைப்பட்டுக் கொள்கிற நோய்களுள் இதுவும் ஒன்று!

‘நெஞ்சினுள் அல்லது மேல் வயிற்றினுள் அல்லது இரண்டினுள்ளும் எரிவது போல் உள்ளது. சாப்பிட்ட பின்னர் அல்லது சாப்பிடாதிருந்தால் இவ் எரிவு அதிகரிக்கிறது’, ‘அடிக்கடி ஏப்பம் வருகிறது’, ‘வாயினுள் புளிப்புச் சுவையை உணர முடிகிறது’, ‘வாய் நாற்றம் ஏற்படுகிறது’, ‘வாந்தி வருவது போல் உணர்வு ஏற்படுகிறது’, ‘சாப்பாடு சரியாகச் செரிமானம் அடையாத்து போல் உணர முடிகிறது’, ‘சாப்பிட்ட உடன் வயிறு ஊதுவது போல் உணர முடிகிறது’ இவையே பொதுவாக எனது நண்பர்களின் முறைப்பாடுகள்.

இன்றைய நவீன அவசர உலகில், சிறுவர் முதல் வயோதிபர் வரை இந்நோயின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது.

எமது உணவைச் சமிபாடடையச் செய்வதற்காக எம் இரைப்பையில் சுரக்கப்படும் சாதாரண அமிலமானது (acid), மிகையாகச் சுரந்து, உணவுக் குழாயில் மேல் நோக்கி (வாயை நோக்கி) ஏறி வருவதால் இக்கோளாறு ஏற்படுகிறது.

இதனால் இது, மேற் சொன்ன அறிகுறிகளுக்கு மேலதிகமாக, நீண்ட கால இருமல், மூக்கரிப்பு, பற்சிதைவு, உடல் மெலிவு போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.

இவ்வாறு தொடர்ச்சியாக அமிலம் மேலேறி வருவதால் ஏற்படும் இவ் அசாதாரண நிலையைச் சிலர் சாதாரணமாய் எடுத்துக் கொண்டாலும், அரிதாக இதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆபத்தானவை என்பதை நாம் மறக்கலாகாது!

அதிலும் குறிப்பாக வாயினையும், இரைப்பையினையும் இணைக்கின்ற குழாயுருக் கட்டமைப்பான களம் எனும் குழாய், இதனால் வெகுவாகப் பாதிப்படைந்து, ஈற்றில் புற்று நோயாக உருமாறும் சந்தர்ப்பமும் உள்ளது!

எனவே மேற் சொன்ன அறிகுறிகள் தென்படுகிற போது, வைத்தியரை நாடி சிகிச்சை பெற்றுக் கொள்வதே புத்தி சாதுர்யமானது!

அத்தோடு, மருத்துவ உலகில் பெரும்பாலான நோய்களை வருமுன் காக்க முடியும். அத்தகைய நோய்களுள் இது முக்கியமானது! எனவே தான் இந்நோய் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்வது எப்படி? இதன் உக்கிரத்தை எவ்வாறு குறைத்துக் கொள்ளலாம்? என்பதை அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்!

எப்படி இந்நோயிலிருந்து தவிர்ந்து கொள்வது?

1. எமது உணவுப் பழக்கம்.

இந்நோயை ஏற்படுத்துவதில் எமது உணவுப் பழக்கம் பிரதான பங்களிப்புச் செய்வது அறியப்பட்டுள்ளது. இரைப்பை அமிலத்தை அதிகம் சுரக்கச் செய்யும் உணவுகளுக்கு நாம் அதிகம் அடிமைப்பட்டிருக்கிறோம்.

குறிப்பாக அதிக எண்ணெய்/ நெய் உபயோகப்படுத்தப்பட்ட உணவுகள், பொரித்த உணவுகள், கொழுப்பு சார்ந்த உணவுகள், கோதுமை மாப் பண்டங்கள், அதிக உறைப்புச் சுவையுடைய உணவுகள், அமிலத் தன்மையுடைய அதாவது அதிக புளிப்புச் சுவையுடைய உணவுகள் போன்றவை இந் நோயை அதிகரிக்கச் செய்கின்றன. எனவே இவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதன் மூலம் அல்லது இவற்றின் நுகர்வைக் குறைப்பதன் மூலம் இந்நோய் ஏற்படுவதை தற்காத்துக் கொள்ளலாம்!

சொகலட், தேயிலை என்பனவும் இந்நோயை ஏற்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதைவிட நாம் உணவு உட்கொள்வதில் காண்பிக்கிற பொடுபோக்குத்தனமும் இந்நோயை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நேரத்திற்கு உண்ணாமையும், அதிக நேரம் தேவையின்றி பசித்திருப்பதும் இந்நோயின் உக்கிரத்தை அதிகரிக்கும். எனவே வேளைக்கு உண்பது இந்நோயின் உக்கிரத்தைக் குறைக்கும்.

மூன்று வேளை மாத்திரம் மூக்குப் பிடிக்க உண்ணாமல், உணவு வேளைகளை சிறிது சிறிதாக உடைத்து, ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு வேளைகள் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதன் மூலம் மிகையாக அமிலம் சுரப்பதைத் தவிர்க்க முடியும்.

அதிகம் மரக்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலமும், தினமும் தூய பாலை அதிகாலையில் பருகுவதன் மூலமும் இந் நோய் ஏற்படாது தவிர்க்க முடியும்.

2. எமது நித்திரைப் பழக்கம்!

சாப்பிட்ட உடன் படுக்கைக்குச் செல்வது, இரைப்பை அமிலம் மேலேறிச் செல்ல வசதியாய்அமைந்துவிடும். எனவே சாப்பிட்டு குறைந்தது மூன்று மணி நேரமாவது சென்ற பின்னரே படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

படுக்கும் போது, இந் நோயறிகுறிகள் உள்ளவர்கள் தலையைச் சற்று உயர்த்தி வைத்துத் தூங்குவது சிறந்தது. இதன் மூலம், அமிலம் மேலேறி வருவதைக் குறைக்க முடியும்.

3. புகைத்தலும், மது பாவனையும்!

எமது இரைப்பைக்கு இவ்விரு பொருட்களும் எதிரிகளாகும். இரைப்பைக்கு மட்டுமல்ல, முழு உடலுக்கும் கூட!

புகைத்தலும், மதுப்பாவனையும் இரைப்பை அமிலத்தின் சுரப்பை வெகுவாக அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவற்றிலிருந்து முற்றாக தவிர்ந்து கொள்வதே ஆரோக்கியமானது!

4. மன அழுத்தம்

அதிக யோசனை, மனக் குழப்பம், மனச் சோர்வு போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தம் (stress) இரைப்பை அமிலத்தின் சுரப்பை வெகுவாக அதிகரிக்கிறது.

பரிட்சை வேளைகள், குடும்ப சண்டைகள், பொருளாதார நெருக்கடி போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி எம்மை இந் நோய்க்கு ஆளாக்கி விடுகின்றன.

எனவே மன அழுத்தம் ஏற்படுவதை இயலுமானவரை தவிர்க்க நாம் முயற்சிக்க வேண்டும்.

உளப் பயிற்சி, சமய கலாசார மற்றும் கலை ஈடுபாட்டின் மூலம் இதனைச் சாதிக்கலாம்.

5. அதிக உடல் பருமன்!

இரைப்பை அமிலம் மேலேறிச் செல்வதை ஊக்குவிக்கும் காரணிகளில் ஒன்றாக அதிக உடற்பருமன் இனங்காணப்பட்டிருக்கிறது.

எனவே உடற்பருமனை முறையான உணவுக் கட்டுப்பாடு மூலமும், தினசரி உடற்பயிற்சி மூலமும் குறைத்துக் கொள்வது இந் நோயிலிருந்து பாதுகாப்புப் பெற உதவும்.

இவ்வாறு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப் பிடிப்பதன் மூலம், இந் நோய் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.

இந் நோயறிகுறிகள் தென்பட்டால், மேற் சொன்ன ஆலோசனைகளைப் பின்பற்றுவதோடு, நான் முதலில் சொன்னது போல் ஒரு வைத்தியரை அணுகி தேவையான மருத்துவ உதவிகளையும் பெற்றுக் கொள்வது சீக்கிரமே இந்நோயிலிருந்து சுகம் பெற உதவும்.

மருந்துகளை மாத்திரமே நம்பி இந்நோயிலிருந்து சுகம் பெற முடியாதென்பதை மறக்க வேண்டாம்!


Post A Comment: